சென்னை : கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர்களின் குறைகளை தீர்வு செய்திடும் வகையில், இருமாதங்களுக்கு ஒருமுறை இரண்டாவது வெள்ளிக்கிழமை மண்டல அளவில் பணியாளர் நாள் நிகழ்வு நடத்தப்படும் என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைப்படி, 27.06.2024 அன்று நடைபெற்ற கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கையின் போது அறிவிப்பு எண்:3ல் ”கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர்களின் குறைகளை தீர்வு செய்திடும் வகையில் இருமாதங்களுக்கு ஒருமுறை மண்டல அளவில் பணியாளர் நாள் நிகழ்வு நடத்தப்படும்” என்ற அறிவிப்பு என்னால் வெளியிடப்பட்டது.
மேற்படி அறிவிப்பினை செயல்படுத்திட, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள், துறை அலுவலர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு இடையே இனக்கமான சூழலை உருவாக்கி பணியாளர்களுடைய பணித்திறனை மேம்படுத்தி உறுப்பினர்களுக்கு சிறந்த சேவை வழங்கும் பொருட்டும், பணி தொடர்பாகவும், பணியின் போதும் அல்லது வேறு வகையிலும் ஏற்படும் குறைகளை பகிர்ந்திடவும், அக்குறைகளை விதிமுறைகளுக்கு உட்பட்டு தீர்வு செய்திடும் வகையில் இரு மாதங்களுக்கு ஒரு முறை மண்டல அளவில் பணியாளர் நாள் நிகழ்வு நடத்திட கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரால் அனைத்து மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்களுக்கு செயல்முறை ஆணை அனுப்பட்டுள்ளது.
அவ்வாணையில், இரு மாதங்களுக்கு ஒரு முறை இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று பணியாளர் நாள் நிகழ்வினை நடத்தவும், அவ்வாறு இராண்டாவது வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக இருந்தாலோ அல்லது வேறு காரணங்களினால் நடத்த இயலாது சூழல் ஏற்பட்டாலோ அடுத்து வரும் வேலை நாளில் அக்கூட்டத்தினை நடத்திடவும், பணியாளர் நாள் நிகழ்வு நடத்தப்படும் இடம் அனைத்து பணியாளர்களும் அமரும் வகையில் உரிய அடிப்படை வசதிகள் நிறைந்த இடத்தில் நடத்திடவும், பணியாளர் நிகழ்வு நடைபெறும் விவரத்தினை அனைத்து பணியாளர்களுக்கும் முன்னரே தெரிவித்து கலந்து கொள்ளச் செய்யவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு பணியாளர் நாள் நிகழ்வு நடத்தப்பட வேண்டிய தேதி முறையே 13.09.2024, 08.11.2024, 10.01.2025 மற்றும் 14.03.2025 என அட்டவனண விவரமும் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் சுழற்சி முறையில் கூட்டத்தினை நடத்திடவும், ஒரு மண்டலத்தில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொள்ளும் போது, வேறு மண்டலத்திற்கு, மேற்படி பணியாளர் நாள் நிகழ்வில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர் / பொது மேலாளர் / உதவி பொது மேலாளர் கலந்து கொள்ள வேண்டும் எனவும், பணியாளர் குறைகள் தொடர்பாக பெறப்படும் மனுக்களை அதற்காக உருவாக்கப்பட்ட இணையதளத்தில் பதிவிட வேண்டும், இணையதளத்தில் பதிவிட முடியாத மனுக்களை பணியாளர் நிகழ்வின் போது அளிக்கலாம் எனவும், அதற்கான கணினி மற்றும் இணையதள வசதிகளை பணியாளர் நாள் அன்று ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அவ்வாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியாளர் நாள் அன்று பெறப்பட்ட மனுக்கள், தீர்வு செய்யப்பட்ட மனுக்கள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய மனுக்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு, கூட்டத் தீர்மானம் பதிவேட்டில் பதியப்பட வேண்டும் எனவும், கூட்டத் தீர்மானத்தில் மண்டல இணைப்பதிவாளர் மற்றும் வங்கியின் மேலாண்மை இயக்குநர், மேலாண்மை இயக்குநர் இல்லாத நிகழ்வில், கூட்டத்தில் வங்கியின் சார்பாக கலந்து கொள்ளும் அலுவலர் கையொப்பமிட வேண்டும் எனவும், பெறப்பட்ட விண்ணப்பங்கள் இரண்டு மாதங்களுக்குள் தீர்வு செய்யப்பட வேண்டும் எனவும், நிராகரிக்கப்படும் மனுக்கள் எந்த காரணத்திற்காக நிராகரிக்கப்படுகிறது என்பதையும் தெளிவாக குறிப்பிட்டு மனுதாரர்களுக்கு பதில் அனுப்பி அவ்விவரங்கள் இணையதளத்தில் பதிவிட வேண்டும் என்ற அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளது”. என கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
The post கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் 2 மாதங்களுக்கு ஒருமுறை பணியாளர் நாள் நிகழ்வு : அமைச்சர் பெரியகருப்பன் appeared first on Dinakaran.