×

நீட் விவகாரத்தில் தவறு செய்தவர்களை கண்டறியாவிட்டால் மறுதேர்வு நடத்த உத்தரவிடுவோம்: ஒன்றிய அரசு, என்டிஏவுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை; நாளை மாலைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

புதுடெல்லி: நீட் முறைகேடு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் அனைவரையும் கண்டறியாவிட்டால் மறுதேர்வு நடத்த உத்தரவிடுவோம் என்று ஒன்றிய அரசு, என்டிஏவுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 5ம் தேதி நடந்தது. வினாத்தாள் கசிவு, ஆள்மாற்றம், தில்லுமுல்லு என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், முடிவுகள் வெளியான போது அதில் 67 மாணவர்கள் 720க்கு 720 என முழுமதிப்பெண் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் 1653 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட விவகாரமும் அம்பலமானது. இதனால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. முதலில் தில்லுமுல்லு எதுவும் நடைபெற வில்லை என்று கூறிய தேசிய தேர்வு முகமையும், ஒன்றிய அரசும் பின்னர் முறைகேடு நடந்ததை ஒப்புக்கொண்டன. கருணை மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்தப்பட்டது.

இதற்கிடையே முறைகேடு நடந்த நீட் தேர்வை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக தொடர்ப்பட்ட அனைத்து வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்,\”ஒட்டுமொத்தமாக நீட் தேர்வு முடிவுகளையே ரத்து செய்ய வேண்டும் ஏனென்றால் தேசிய தேர்வுகள் முகமை இந்த விவகாரத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் எதையும் பின்பற்றவில்லை. நீட் தேர்வு வினாத்தாள்கள் செல்போன்களில் கசிந்துள்ளது. பள்ளிக்கூடங்களில் இருந்த பிரிண்டர்களில் அவை பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி முழு மதிப்பெண் பெற்றவர்களில் மனுதாரர் தரப்பில் யாரேனும் உள்ளனரா என்று கேட்டார். அதற்கு ஒருவர் கூட கிடையாது என்று மனுதாரர் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் குறுக்கிட்ட தலைமை நீதிபதி ,\”நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை ஒப்பு கொள்கிறீர்களா. உங்களால் சரியான முறையில் தேர்வை நடத்த முடியவில்லை என்றால் நீட் தேர்வை ரத்து செய்து விடுங்கள். ஒருவேலை அப்படி செய்யும் பட்சத்தில் தேர்வு எழுதிய 24 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்திற்கான வழியை கூறிவிட்டு செய்யுங்கள் என்று தேசிய தேர்வுகள் முகமைக்கு காட்டமாக கேட்டார்.

இதையடுத்து அதற்கு பதிலளித்த ஒன்றிய அரசு மற்றும் தேசிய தேர்வுகள் முகமை ஆகியவை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஒரு இடத்தில் மட்டும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்கள் மற்றும் பிறர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களது மதிப்பெண்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. பீகார் மாநில பொருளாதார குற்றப்பிரிவு நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதையும், அதில் 13 நபர்கள் சேர்க்கப்பட்டிருப்பதையும் பத்திரிக்கையில் கடந்த ஜூன் 23ம் தேதி வெளியிடப்பட்டு இருந்தது. அந்த பத்திரிகை குறிப்பு அதிகாரப்பூர்வமானது இல்லை. மேலும் நடந்து முடிந்த நீட் தேர்வை 23,33,295 மாணவர்கள் 571 நகரங்களில், நாடு முழுவதும் 4750 மையங்கள் மற்றும் 14 வெளிநாடு மையங்கள் உட்பட்ட இடங்களில் எழுதியுள்ளனர்.

இதில் வெளிநாடுகளுக்கு தூதரகங்கள் மூலம் வினாத்தாள் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் நீட் வினாத்தாள் கசிவு குறித்து டெல்லி, ராஜஸ்தான், பாட்னா, ஜார்கண்ட், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் மொபைல்களும் கைப்பற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். அப்போது, நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் அனைவரையும் கண்டறியாவிட்டால் மறுதேர்வு நடத்த உத்தரவிடுவோம். ஒருவேளை அவர்கள் யார் என்று கண்டறியப்பட்டுவிட்டால் 24 லட்சம் மாணவர்கள் மீண்டும் நீட் தேர்வு எழுத தேவையில்லை. அதனை கருத்தில் கொண்டு துரிதமாக செயல்பட வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கும், தேசிய தேர்வுகள் முகமைக்கும் உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் எச்சரிக்கை விடுத்தார்.

இதைதொடர்ந்து ஒன்றிய அரசு மற்றும் தேசிய தேர்வுகள் முகமைக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் சரமாரி கேள்வியெழுப்பினார். அதன் விவரம்: நடந்து முடிந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உன்மையான நிலவரம் என்ன என்று நாங்கள் கண்டிப்பாக தெரிந்துக்கொள்ள வேண்டும். எனவே, நீட் வினாத்தாள் எங்கிருந்து உருவாக்கப்படுகிறது. அதனை தயாரிக்க ஒரே நிபுணர் கொண்ட குழுவா அல்லது அதற்கும் மேல் உள்ளதா. வெளிநாடுகளுக்கு நீட் வினாத்தாள் எப்படி அனுப்பி வைக்கப்படுகிறது.

மேலும் தயார் செய்யப்பட்ட வினாத்தாள்களை தேசிய தேர்வுகள் முகமை எப்படி அதன் கஸ்டடியில் வைத்திருந்தது. எந்த அச்சகத்தில் வினாத்தாள் அச்சடிக்கப்பட்டது. இரண்டு செட் வினாத்தாள் என்றால் மொத்தம் 50லட்சம் வினாத்தாள்கள் வரும். தலைமை இடம் டெல்லி என்று கூறுகிறீர்கள். அப்படியென்றால் வினாத்தாள் அச்சடிக்கப்படும் இடத்தில் இருந்து பின்னர் எப்படி பாதுகாப்பாக மீண்டும் தலைமை இடத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து இந்தியாவில் உள்ள மையங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் மையங்களுக்கு நீட் வினாத்தாள் எப்படி அனுப்பப்பப்படுகிறது.

மேலும் இந்த விவகாரத்தில் நடந்த உண்மை நிலவரம் என்ன. தேர்வு நடந்த நேரத்திற்கும், வினாத்தாள் கசிந்த நேரத்திற்குமான இடைவெளி எவ்வளவு. நடப்பாண்டு நீட் தேர்வில் மட்டும் 67 மாணவர்கள் 100சதவீதம் அதாவது 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றது எப்படி. இந்த விவகாரத்தில் 24 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் அடங்கியுள்ளது. இதில் நடுத்தர குடும்பத்தார்களும் அடங்கியுள்ளனர். இருப்பினும் நீட் வினாத்தாள் கசிந்தது என்பது முடிந்த கதை என்பதை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இருப்பினும் இதுபோன்ற செயல்பாடுகள் நீட் தேர்வின் புனிதத்தன்மையை கெடுத்து விடுகிறது. இதனை கண்டிப்பாக ஏற்க முடியாது.

இருப்பினும் எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருக்க வேண்டிய சூழலை ஏற்படுத்த வேண்டும். இதில் மேற்கண்ட கேள்விகள் அனைத்திற்கும் ஒன்றிய அரசு மற்றும் தேசிய தேர்வுகள் முகமை ஒரு குறுகிய பக்கங்கள் கொண்ட அறிக்கையை புதன்கிழமை மாலை 5மணிக்குள் (நாளை) தாக்கல் செய்ய வேண்டும். அதேப்போன்று நீட் வினாத்தாள் கசிவு குறித்து இதுவரையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று சிபிஐ தரப்பிலும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதேப்போன்று நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்து விட்டு, மறுதேர்வு நடத்த வேண்டும் என்று கூறுவது ஏன் என்ற விரிவான விளக்கத்தையும் மனுதாரர்கள் தரப்பில் ஒரு சுருக்கமான அறிக்கையாக தாக்கல் நீதிமன்றத்தில் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்தனர்.

* நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உண்மையான நிலவரம் என்ன?
* 67 மாணவர்கள் முதல் மதிப்பெண் பெற்றது எப்படி?
* எந்த நேரத்தில் வினாத்தாள் கசிந்தது? தேர்வுக்கு முன்பாக எங்கெல்லாம் வினாத்தாள் கசிந்துள்ளது?
* வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? உள்ளிட்ட கேள்விகளை உச்ச நீதிமன்றம் எழுப்பி உள்ளது.

The post நீட் விவகாரத்தில் தவறு செய்தவர்களை கண்டறியாவிட்டால் மறுதேர்வு நடத்த உத்தரவிடுவோம்: ஒன்றிய அரசு, என்டிஏவுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை; நாளை மாலைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Union Govt, ,NDA ,New Delhi ,Union Government ,Union Government, NDA ,Dinakaran ,
× RELATED ஒரு வழக்கில் ஒருவர் கைதாகிறார்...