×

வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகளால் இளநிலை ‘நீட்’ தேர்வு ரத்தாகுமா?: உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்

டெல்லி: வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகளால் இளநிலை ‘நீட்’ தேர்வு ரத்து கோரிய வழக்குகள் மீதான பரபரப்பான வாதம் இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. நடப்பாண்டு கடந்த மே 5ம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வில் (நீட்) வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு புதிதாக தேர்வு நடத்த வேண்டும் என்றும், முறைகேடு தொடர்பாக நீதிமன்றக் கண்காணிப்பின்கீழ் விசாரணை நடத்த வேண்டும் என்றும், தேசிய தேர்வு முகமையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பல்வேறு தேர்வு மையங்களில் தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் வெளியானது, தேர்வு மையத்தில் தேர்வு கண்காணிப்பாளரே வினாத்தாள்களை நிரப்பியது என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. நீட் தேர்வில் இம்முறை நடந்த முறைகேடுகள் போட்டித் தேர்வுக்குத் தயாரான மாணவர்களையும் அவர்களின் குடும்பங்களையும் இந்த சம்பவங்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நீட் முறைகேடுகளுக்கு எதிராகப் பல்வேறு அரசியல் தலைவர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் குரல் கொடுத்த நிலையில் நீட் முறைகேடுகளைத் தடுக்க உயர்நிலை நிபுணர் குழு ஒன்றை ஒன்றிய அரசு அமைத்திருக்கிறது.

தேர்வுகள் வெளிப்படையாக, சுமுகமாக, நியாயமாக நடத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில், இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழு தங்களது விசாரணையை தொடங்கி உள்ளது. இதற்கிடையே இதற்கிடையே நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக ராஜஸ்தான், அரியானா, உத்தரபிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோரை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் ‘நீட்’ முறைகேடுகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 38 மனுக்கள் மீது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் ஜெ.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று இவ்வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அதன்படி, இன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணை நடத்தது. தொடர்ந்து பிற்பகல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளது.

 

The post வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகளால் இளநிலை ‘நீட்’ தேர்வு ரத்தாகுமா?: உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Dinakaran ,
× RELATED ஒரு வழக்கில் ஒருவர் கைதாகிறார்...