ஆஷாட நவராத்திரி ஆரம்பம்
6.7.2024 – சனி
வசந்த நவராத்திரி, ஆஷாட நவராத்திரி, சாரதா நவராத்திரி, சியாமளா நவராத்திரி என்னும் இந்த நான்கு நவராத்திரிகளில் ஆஷாட நவராத்திரி மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகிறது. ஆஷாட நவராத்திரி காலம் என்பது ஆனி மாதத்தில், சாந்திரமான கால கணிதமுறையில், ஆஷாட மாதம் தொடங்குகின்ற அமாவாசை முதல் நவமி வரையிலான காலம் ஆகும். ஆனி – ஆடி மாதங்களில் புதுப் புனலாக ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுக்கின்ற காலம். பூமித் தாயே சூல் கொண்டு, பயிர்கள் அனைத்தையும் கருக் கொள்கின்ற காலம். ஆஷாட நவராத்திரியில் வரும் பஞ்சமி திதி, (11.7.2024) அன்னை வாராஹி வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது. இந்த நாளில் செய்யும் வேண்டுதல்கள் அனைத்தும் அப்படியே ஸித்திக்கும் என்கிறது பிரமாண்ட புராணம். வாராஹி அம்மன். அன்னை கைகளில் ஏர்க் கலப்பையும் உலக்கையும் கொண்டு காட்சி தருகிறாள். இதுவே இவள் உழவுத் தொழிலைக் காத்து அருள்பவள் என்பதன் அடையாளம். அதனால்தான் தமிழகத்தின் நெற் களஞ்சியமான தஞ்சைப் பெரிய கோயிலில் அன்னைக்குத் தனிசந்நதி கண்டு வழிபட்டான் ராஜராஜன். தஞ்சைப் பெரிய கோயிலில் இப்போதும் ஆஷாட நவராத்திரி மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அன்னைக்கு இந்த நாள்களில் நவதானிய அலங்காரம், தேங்காய்ப்பூ, சந்தனம், குங்கும அலங்காரம் எனத் தினமும் ஒரு பொருளால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபடுவார்கள்.
புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை
7.7.2024 – ஞாயிறு
பூரி, ஒடிசா மாநிலத்தில் அமைந்திருக்கும் புண்ணிய நகரம். ‘புருஷோத்தம க்ஷேத்திரம் பூரி ஜகந்நாதம்’ என்று புராணங்களால் போற்றப்படும் அற்புதத் தலம். பல்வேறு புராண நிகழ்வுகள் இங்கு நிகழ்ந்ததாக நம்பப்படும் இந்தத் தலத்தின் சிறப்புகள் அநேகம். பகவான் கிருஷ்ணர் இங்கு விரும்பி வந்து கோயில்கொண்டார் என்கிறார்கள். இந்திரத்துய்மன் என்கிற மன்னன் பூவுலகில் பகவான் விஷ்ணுவுக்கு மாபெரும் ஆலயம் ஒன்றை அமைக்க விரும்பியபோது, பகவான் கிருஷ்ணரே சிற்பியாக வந்து இங்குள்ள ஆலயத்தையும் கருவறை தெய்வங்களையும் வடித்தார் என்கிறார்கள்.12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த ஜகந்நாதர் ஆலயத்தில் பாலபத்திரர் (பலராமர்), ஜகந்நாதர் (மகாவிஷ்ணு), சுபத்ரா (கிருஷ்ணரின் தங்கை) ஆகியோர் மூலவர்களாக அருள்பாலிக்கின்றனர். இவர்களோடு பகவானின் சுதர்சன சக்கரமும் இங்கு வழிபடப்படுகிறது. ஆண்டுதோறும் ஆஷாடமாதத்தின் வளர்பிறையின் இரண்டாம் நாள் இந்த
ரத யாத்திரை தொடங்கும். இதற்கென ஒவ்வோர் ஆண்டும் புதிய தேர்கள் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பூரி ரத யாத்திரை 2024 ஜூன் 29 ஆம் தேதி தொடங்கி ஜூலை 7 ஆம் தேதி கொண்டாடப்படும்.
இந்த யாத்திரையின் ஒரு முக்கியத்துவம் என்னவென்றால், ஆண்டுதோறும் 4-5 லட்சம் யாத்ரீகர்கள் தரிசிக்கிறார்கள். தேரில் உள்ள சிலைகளை தரிசனம் செய்ய இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் அதிக அளவில் குவிவார்கள். ரத தெய்வதரிசனம் செய்பவர்களுக்கு ஒரு வருடம் செழிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை.
அமிர்த லட்சுமி விரதம்
7.7.2024 ஞாயிறு
மகா லட்சுமிக்குரிய விரத நாள்களில் ஒன்று அமிர்த லட்சுமி விரதம். அது இன்று. திருப்பாற்கடலை கடைந்தபோது, ஆதிநாளில் வந்தவள் என்பதால் இவளுக்கு ஆதிலட்சுமி என்ற சிறப்புக் காரணப் பெயர் ஏற்பட்டுள்ளது. அமிர்தத்தோடு வந்ததால் அமிர்த லட்சுமி. இந்த அமிர்த லட்சுமியை வணங்குவதால் உடல் நலம் பெறலாம். அழகிய, தூய்மையான தாம்பாளத்தின் மீது தலை வாழை இலை இட்டு அதன் மீது அரிசி பரப்பி, கலசம் வைக்க வேண்டும். இக்கலசத்தினுள் சுத்தம்மன் தீர்த்தம் மற்றும் வாசனை பொருட்கள் (பச்சை கற்பூரம், மஞ்சள் பொடி), ஆகியவற்றை இட்டு நிரப்ப வேண்டும். கலசத்தின் மீது தேங்காயின் குடுமிப் பகுதி மேல்புறம் இருக்குமாறு வைக்க வேண்டும். அந்த தேங்காய்க்கு மஞ்சள் குங்குமம் இட வேண்டும். முன்பகுதி திருமுகத்துக்குப் பொட்டிட்டு, பூக்களைச் சூட்டி அலங்கரிக்க வேண்டும். மகாலட்சுமி அஷ்டோத்திரம் பாடி வழிபட வேண்டும். பூஜை முடிந்த பின்பு தாயாருக்குப் பருப்பு பாயசம், தேங்காய் மற்றும் உளுந்து கொழுக்கட்டை, பால், தயிர், வெற்றிலை பாக்கு, பழம் இவை அனைத்தையும் நைவேத்தியம் செய்து தூப தீபம் காட்டி நிறைவு செய்ய வேண்டும்.
அமர் நீதி நாயனார் குருபூஜை
11.7.2024 – வியாழன்
அமர்நீதி நாயனார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். பழையாறை என்னும் பகுதியிலே பிறந்தார். வணிகத்தால் பெரும் பொருள் ஈட்டினார். ஈட்டிய பொருளைக் கொண்டு சிவனடியார்க்குப் பணிசெய்வதையே, தனது ஆத்மா கடைத்தேறும் வழியாகக் கொண்டிருந்தார். சிவனடியார்க்கு உணவு அளித்தல், அவர்கள் விரும்பி அணியும் ஆடை (கீழ்கோவணம்) அளித்தல் ஆகிய திருத்தொண்டுகளைச் செய்து வந்தார். இவரை சோதிக்க எண்ணிய இறைவன் சிவனடியாராக வந்தார். ஒரு கோவணத்தை தந்து பாதுகாக்கச் சொன்னார். இவர் புத்தாடைகளே தருவேன் என்றார்.‘‘நீர் தரும் ஆடைகள் எமக்குத் தேவையில்லை. நம்மிடமே மாற்று உடை உண்டு. இதோ இந்தத் தண்டத்தில் கட்டியுள்ள கோவணத்தை உம்மிடம் தருகின்றோம். நீர் இதைப் பாதுகாத்து, நீராடி விட்டு வந்தவுடன் தரவேண்டும்’’ என்று தண்டில் கட்டி இருந்த ஒரு கோவணத் துணியை அவிழ்த்து, அமர்நீதி நாயனாரிடம் தந்தார். அமர்நீதியார் அதனைத் தனியாக ஓர் இடத்தில் வைத்தார்.
சிவனடியாருக்காகக் காத்திருந்தார். சற்று நேரத்தில் சிவனடியார் மழையில் நனைந்தவராய் வந்தார். ‘‘என் உடல் நடுங்குகிறது. விரைவாகச் சென்று எம் கோவணத்தைக் கொண்டு வாரும்’’ என்று கூறினார். உள்ளே சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கோவணம் வைத்த இடத்தில் காணாது திகைத்தார். திரும்பத் திரும்பத் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. தேடிச் சலிப் படைந்த அமர்நீதி நாயனார், வேறு ஒரு உடை தர, சிவனடியார் சீறிச் சினந்தார். ‘‘அமர்நீதியாரே! நன்றாக இருக்கிறது உங்கள் வணிகம்! அடியார்களுக்கு நல்ல கோவணம் கொடுப்பேன் என்று, உலகை நம்ப வைத்தது, என்னுடைய கோவணத்தை எடுத்து மறைத்து வைத்துக் கொண்டாயா?’’ சிவனடியாரின் சீற்றம் கண்டு அமர்நீதியார் நடுங்கினார். அவர் சமாதானமடையவில்லை. ‘‘இதற்கு என்ன பிராயச்சித்தம் செய்ய வேண்டுமானாலும் செய்கிறேன்’’ என்று கூறினார். சிவனடியார், ‘‘சரி, இன்னொரு கோவணம் இந்தத் தண்டில் சுற்றி வைத்திருக்கிறேன்.
இதற்கு இணையான ஒரு கோவணம் உம்மிடம் இருந்தால் தரலாம்’’ என்றார். பெரிய தராசு கொண்டு வந்து வைத்தார். சிவனடியார் தண்டில் கட்டியிருந்த நனைந்த கோவணத்தை வைத்தார். அமர் நீதியார் தம்மிடம் இருந்த விலை உயர்ந்த அழகான கோவணத்தை அடுத்த தட்டில் வைத்தார். ஆனால் அந்தத் தட்டு இறங்கவே இல்லை. சிவனடியார் சிரித்தார். ‘‘நான்தான் இதற்கு இணையான கோவணமில்லை என்று சொல்கிறேனே’’ என்று கேலி செய்தார். தம்மிடம் இருந்த அத்தனைத் துணிமணிகளையும் வைத்தார். தட்டு இறங்குவதாக இல்லை. தம்மிடமிருந்த ஆபரணங்களையும், வைர வைடூ ரியங்கள் என எல்லாச் செல்வங்களையும் தராசுத்தட்டில் வைத்தார். தராசு. இறங்கிவேயில்லை. தன்னுடைய மனைவியையும் மகனையும் அந்தத் தராசின் மீது ஏறி நிற்கச் சொல்லி, ‘‘சிவாய நம’’ என்ற மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே தானும் ஏறி நின்றார். நாயனார் ஏறியவுடன் தராசுத் தட்டு கீழே இறங்கி கோவணத் திற்குச்சமமாக நின்றது. ‘‘ஐயா திருப்திதானே?’’ என்று கேட்டார் அமர்நீதி நாயனார். ‘‘திருப்தி. திருப்தி’’ என்று சொல்லிக்கொண்டே மறைந்து போனார் சிவனடியார். அடுத்த நொடி அடியாராக வந்த இறைவர், திருநல்லூரில் பொருந்திய அம்மையப்பராகிய திருக்கோலத்தை அமர்நீதியாருக்குக் காட்டியருளினார். அமர்நீதியார் குருபூசைநாள் ஆனி பூரம். இன்று.
சிதம்பரம் தேர்
11.7.2024 – வியாழன்
ஆனி உத்திரத்திருவிழா சிதம்பரத்தில், பத்து நாட்கள் நடைபெறும். எட்டாம் நாள் வரை உற்சவ மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர், சிவானந்த நாயகி, சண்டேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் தனித்தனியாக வெள்ளி மற்றும் தங்க வாகனங்களில் வீதியுலா வருவார்கள். ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா நடைபெறும். அன்று பஞ்சமூர்த்திகளும் ஐந்து தேர் களில் எழுந்தருளி உலா வருவார்கள். நடராஜப்பெருமானே தேரில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் உலா வரும் அதிசயம் வேறு எங்கும் காண முடியாதது.தேர் மாலையில் நிலைக்கு வந்த பிறகு, நடராஜரையும், அன்னை சிவகாமியையும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்வார்கள். விடிகாலை முதல் பல மணி நேரம் பற்பல பொருட்களாலும் வாசனை திரவியங்களாலும் மஹா அபிஷேகம் நடைபெறும். அதன்பின் அற்புத அலங்காரத்தில், ஆடி ஆடி அசைந்து இருவரும் ஆனந்த நடனம் புரிந்தவாறு ஞானாகாச
சித்சபையில் எழுந்தருள்வார்கள். சிதம்பரம் தேர் இன்று.
குமார சஷ்டி
11.7.2024 – வியாழன்
முருகப்பெருமானுக்கு எத்தனையோ விரதங்கள் உண்டு. அதிலே சஷ்டி விரதம் மிக உயர்வானது. அதிலும் கந்த சஷ்டி விரதம் மிக மிக சிறப்புடையது. இந்த கந்த சஷ்டி விரதத்தை தவிர, வேறு சில சஷ்டி விரதங்களும் உண்டு. அதில் ஒன்றுதான் குமார சஷ்டி. ஆனி மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியும், கார்த்திகை மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியும் குமார சஷ்டி விரதம் எனப்படும். கார்த்திகை மாத வளர்பிறை குமார சஷ்டியைச் ‘சுப்பிரமணிய சஷ்டி’ என்றும், ‘அனந்த சுப்பிரமணிய பூஜை’ என்றும் கூறுவர். பக்தர்கள் இந்த நாளில் முருகப் பெருமானை முழு ஈடுபாட்டுடன் வழிபட வேண்டும். இறைவனுக்கு சந்தனம், குங்குமம், தூபம், பூ, பழங்கள் என சிறப்பு பிரசாதம் படைக்க வேண்டும். ‘ஸ்கந்த ஷஷ்டி கவசம்’, ‘சுப்ரமணிய புஜங்கம்’ அல்லது ‘சுப்ரமணிய புராணம்’ ஆகியவற்றைப் பாராயணம் செய்வது மிகவும் மங்களகரமானது. சில பக்தர்கள் கடுமையான விரதத்தை கடை பிடிக் கின்றனர். அவர்கள் எழுந்தது முதல் மாலையில்முருகன் கோயிலுக்குச் செல்லும் வரை எதையும் சாப்பிடுவதையோ குடிப் பதையோ தவிர்ப்பார்கள். இறைவனை வழிபட்ட பின்னரே விரதம் முடியும். முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆரத்திகளும் நடைபெறும். இந்த விரதம் அனைத்து அசுர குணங்களிலிருந்தும் விடுவிக்கும். மனரீதியாகவும் ஆன்மிக ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க வைக்கும்.
விஷ்ணுபிரியா
7.7.2024 – ஞாயிறு ஸ்ரீ வில்லிபுத்தூர் பெரியாழ்வார் சந்திரபிரபையில் பவனி.
8.7.2024 – ராமநாதபுரம் ஸ்ரீ கோதண்ட ராமர் சுவாமி அனுமார் வாகனத்தின் திருவீதி உலா.
9.7.2024 – திங்கள்கிழமை சதுர்த்தி.
9.7.2024 – திங்கள்கிழமை மாணிக்கவாசகர் திருநட்சத்திரம் திருவாசகம் முற்றோதல்.
10.7.2024 – புதன்கிழமை ஆவுடையார் கோயில் தேரோட்டம்.
10.7.2024 – புதன்கிழமை சமீ கௌரி விரதம்.
11.7.2024 – வியாழக்கிழமை ஆசாட பஞ்சமி.
11.7.2024 – வியாழக்கிழமை திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் பாலபிஷேகம்.
11.7.2024 – வியாழக்கிழமை இரவு வெள்ளி ரதம் ஆவுடையார் கோயில்.
11.7.2024 – வியாழக்கிழமை சங்கரன் கோயில் கோமதி அம்மன் திருவிழா தொடக்கம்.
12.7.2024 – வெள்ளிக்கிழமை ஆனி உத்திர தரிசனம்.
12.7.2024 – வெள்ளிக்கிழமை ஆவுடையார் கோயிலில் ஸ்ரீ மாணிக்க
வாசகருக்கு உபதேச காட்சி.
The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.