பெரும்புதூர்: பெரும்புதூரில் கல்லூரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர் பகுதியில் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் உள்ளது. இங்கு தமிழகம், கேரளா, கர்நாடகா, போன்ற மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கல்வி பயின்று வருகின்றனர். கல்லூரி விடுதியில் 160க்கும் அதிகமான மாணவர்கள் தங்கி உள்ளனர். இந்த, விடுதியில் தங்கியிருந்த மாணவர்களுக்கு வழக்கம்போல மதிய உணவு வழங்கபட்டுள்ளது. அதனை சாப்பிட்ட மாணவர்கள் வகுப்பறைக்கு சென்றுள்ளனர்.
அப்போது திடீரென மாணவர்கள் சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, 43 மாணவர்களுக்கும் அடுத்தடுத்து உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர் பாதிப்படைந்த மாணவர்கள் அனைவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்த, பெரும்புதூர் போலீசார், கல்லூரி நிர்வாகத்திடம் நடத்திய விசாரணையில் 3 மூன்று அடுக்குமாடுகளில் தங்கியிருந்த மாணவர்கள் அனைவருக்கும் ஒரே உணவு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு அடுக்கு மாடியில் விநியோகம் செய்யப்பட்ட குடிநீரை பருகிய மாணவர்களுக்கு மட்டும் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கல்லூரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.