×
Saravana Stores

கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகத்தை காயரம்பேடு பகுதிக்கு இடமாற்றம் செய்ய கடும் எதிர்ப்பு: நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகத்தை காயரம்பேடு பகுதிக்கு இடமாற்றம் செய்வதற்கு நந்திவரம் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், அதே இடத்தில் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டம் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் மின்வாரிய அலுவலகம் உள்ளது. இங்கு கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளாக இரு பிரிவுகளில் இயங்கி வரும் மின்வாரிய அலுவலகத்தில் மேற்கு பகுதியில் நந்திவரம், கோவிந்தராஜபுரம், நாராயணபுரம், வள்ளி நகர், பெருமாட்டுநல்லூர், கன்னிவாக்கம், தர்காஸ், பாண்டூர், மூலக்கழனி, காயரம்படு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் அடங்கும்.

இந்நிலையில், பொதுமக்களிடம் எந்த ஒரு கருத்தும் கேட்காமல் கூடுவாஞ்சேரியில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் மின்வாரிய அலுவலகத்தில் மேற்கு பகுதியை தனியாக பிரித்து பல கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காயரம்பேடு பகுதிக்கு இடமாற்றம் செய்வதாக தகவல் வெளியானது. இதற்கு நந்திவரம் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நந்திவரம் பொதுமக்கள் கூறுகையில், ‘நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், கூடுவாஞ்சேரியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் காலங்காலமாக மின் கட்டணம் செலுத்துவது எளிதாக இருந்து வந்தது. இதற்காக பேருந்து வசதிகளும் உள்ளன. ஆனால், பொதுமக்களிடம் எந்த ஒரு கருத்தும் கேட்காமல் மின்வாரிய அலுவலகத்தை பேருந்து வசதி இல்லாத காயரம்பேடு பகுதிக்கு திடீரென இடமாற்றம் செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதில், எளிதில் சென்று மின் கட்டணம் செலுத்துவது அல்லது மின்சாரம் குறித்த புகார் கூறுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காக 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் சென்று அலைந்து திரிய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த முடிவை மின்சார வாரியம் கைவிட வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

The post கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகத்தை காயரம்பேடு பகுதிக்கு இடமாற்றம் செய்ய கடும் எதிர்ப்பு: நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Guduvanchery power board ,Kayarambedu ,Guduvanchery ,Nandivaram ,Guduvanchery power board office ,Chengalpattu district ,Guduvancheri ,Guduvancheri power board ,Kayarampedu ,Dinakaran ,
× RELATED மாடம்பாக்கம் ஊராட்சி தலைவர் கொலை...