ஜெய்ப்பூர்: ஒருவர் இந்துவா? இல்லையா? என்பதை அறிய அவருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்று பாஜக அமைச்சர் பேசியதால் சர்ச்சை எழுந்துள்ளது. ராஜஸ்தானில் பாஜக ஆட்சி நடைபெறும் நிலையில், அம்மாநில கல்வித் துறை அமைச்சர் மதன் திலாவர், கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், ‘ஒருவர் இந்துவா இல்லையா என்பதை அவர்களின் டிஎன்ஏ வைத்து பரிசோதனை செய்ய வேண்டும். அவர்கள் இந்துவாக இல்லையென்றால், அவர்களின் தந்தை யார்? என்பதை கண்டுபிடிக்க வேண்டும்’ என்று சர்ச்சை ஏற்படுத்தும் விதமாக பேசினார். இவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. அமைச்சர் மதன் திலாவரைக் கண்டித்து, பாரத ஆதிவாசி கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது பாரத ஆதிவாசி கட்சி தலைவர் ராஜ்குமார் கோட் மற்றும் அவரது ஆதரவாளர்கள், தங்கள் ரத்த மாதிரிகளை கைகளில் பிடித்துக் கொண்டு, மதன் திலாவரின் இல்லத்தை நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது அங்கு அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் அமர் ஜவான் ஜோதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ராஜ்குமார் ரோட் கூறுகையில், `அமைச்சர் மதன் திலாவரின் பேச்சால் மக்கள் பெரும் கோபம் அடைந்துள்ளனர். அவர் ராஜினாமா செய்துவிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். பிரதமரிடமும் இதுகுறித்து முறையிட உள்ளோம். பாஜக தலைவர்கள் மதவாத அரசியலை நிறுத்த வேண்டும். எங்கள் டிஎன்ஏ பரிசோதனையை மேற்கொள்ளும் வகையில் தலைமுடி, நகங்கள் போன்றவற்றை தபால் மூலம் அமைச்சர் திலாவருக்கு அனுப்பப் போகிறோம்’ என்றார். இந்த போராட்டம் குறித்து அமைச்சர் மதன் திலாவர் கூறுகையில், ‘பழங்குடியினர் எங்கள் சமூகத்தின் ஒரு பகுதி. அவர்கள் இந்துக்கள்தான், இந்துக்களாகவே எப்போதும் இருப்பார்கள்’ என்று தான் கூறியதை நியாயப்படுத்தும் வகையில் பதில் அளித்தார்.
The post ஒருவர் இந்துவா? இல்லையா? என்பதை அறிய டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும்: பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சால் தர்ணா appeared first on Dinakaran.