×

இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் மகசூல் இழப்பிற்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும்

புதுக்கோட்டை,ஜூன் 29: இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் மகசூல் இழப்பிற்கு விவசாயிகள் ஜூலை 31ம்தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் 2021-22ம் ஆண்டில் 85 பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டு 68 தரிசு நில தொகுப்புகள் அமைக்கப்பட்டன. 47 தரிசு நில தொகுப்புகளில் ஆழ்துளைக்கிணறு அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது வரை 34 தரிசு நிலத்தொகுப்பில் நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டு 33 தொகுப்பில் பழ மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. 1102 ஏக்கர் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வரப்பட்டு, 1374 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். 2022-23ம் ஆண்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் 120 கிராமப் பஞ்சாயத்துகள் தெரிவு செய்யப்பட்டு, 74 தரிசு நிலத்தொகுப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. தெரிவு செய்யப்பட்ட 74 தரிசு நில தொகுப்புகளில், 65 தொகுப்புகள் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டு 37 தொகுப்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது.

நடப்பு 2023-24ம் ஆண்டு 98 பஞ்சாயத்துக்களில் இதுவரை 14 தரிசு நிலத் தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டு, பணி நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டு இத்திட்டத்தில் 98 கிராம பஞ்சாயத்துக்களில் 2 தரிசு நில தொகுப்புகள் கண்டறியப்பட்டுள்ளது, மேலும், மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே, விவசாயிகள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மானியத் திட்டங்களை பெறுவதற்கு வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகி உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 2024-25ம் ஆண்டு காரிப் பருவத்தில் நெல் – I, மக்காச்சோளம் I. நிலக்கடலை ஆகிய பயிர்கள் சாகுபடி மேற்கொண்டு வரும் நிலையில் விவசாயிகள் அனைவரும் ரபி பருவத்தில் சாகுபடி செய்துள்ள மேற்குறிப்பிட்ட அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு அறிவிக்கை செய்யப்பட்டுள்ள வருவாய் கிராமம் குறுவட்டம்,

ஆகியவை அறிந்து காப்பீடு செய்து இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் மகசூல் இழப்பிலிருந்து வருவாய் இழப்பினை ஈடு செய்துகொள்ள பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பயிர் காப்பீடு பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஏக்கருக்கு விவசாயிகள் பிரீமியம் தொகையாக நெல் – I ரூ.712, மக்காச்சோளம் – I ரூ.588/-, நிலக்கடலை ரூ.566 செலுத்தி காப்பீடு பதிவு செய்ய கடைசி நாளான 31.7.2024,-க்குள் அருகாமையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது பொது சேவை மையங்கள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் பயிர் காப்பீடு பதிவு செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பயிர் காப்பீடு பதிவின் போது அளிக்கப்படவேண்டிய ஆவணங்கள், அடங்கல் (காரிப் பருவம்) 2024-25- 1434 பசலி ஆண்டு சாகுபடி, சிட்டா நகல், வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல், முன்மொழிவு படிவம், பதிவு படிவம் முதலியன. பிரதம மந்திரி விவசாயிகள் கவுரவ நிதியுதவித்திட்டம், புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதம மந்திரி விவசாயிகளின் கவுரவ நிதித் திட்டத்தின்கீழ் 1,41,290 விவசாயிகள் பதிவு செய்து பயன் பெற்று வருகின்றனர்.

இத்திட்டத்தின்கீழ் 1.2.2019க்கு முன்பு நேரடி பட்டா உள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 வீதம் ஒரு வருடத்திற்கு ரூ.6000 மூன்று தவணைகளாக ஏப்ரல் – செப்டம்பர், ஆக்ஸ்ட்- நவம்பர் மற்றும் டிசம்பர் – மார்ச்மாதங்களில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவுவைக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தொடர்ந்து தவணை தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண்ணுடன் இணைத்து DBT Mode-ற்கு மாற்றிக்கொள்ளும்படிகேட்டுக்கொள்ளப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 3571 பயனாளிகள் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்காமல் உள்ளனர். மேலும் விவசாயிகள் விரைந்து e-KYC-யினை பதிவேற்றம் செய்திடக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் 2362 பயனாளிகள் e-KYC பதிவேற்றம் செய்யாமல் உள்ளனர். விவசாயிகள் தங்கள் கிராம பொறுப்பு அலுவலர்களை தெரிந்துகொள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகவும். தகுதி உள்ள விவசாயிகள் தங்கள் கிராம பொறுப்பு அலுவலர்களை அணுகி தவணைத் தொகை ஏன் வரவு வைக்கப்படவில்லை என்பதை தெரிந்துகொண்டு அதனை நிவர்த்தி செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த தகவலை கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

The post இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் மகசூல் இழப்பிற்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Collector ,Mercy Ramya ,
× RELATED புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு...