×
Saravana Stores

புற்று நோயால் பாதித்த கணவன் உயிரிழப்பை பார்த்து காதல் மனைவி தற்கொலை: இறப்பிலும் இணைபிரியாத தம்பதி

புழல்: புழல் அருகே புற்று நோயால் பாதித்த காதல் கணவன் உயிருக்கு போராடியதை பார்த்து அவரது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் இறந்த சிறிது நேரத்தில் கணவரும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. புழல் விநாயகபுரம் அடுத்த கடப்பா ரோடு அன்னை பராசக்தி நகரை சேர்ந்தவர் ஞானசெல்வம் (59). இவரது மனைவி எஸ்தர் சரோஜினி (55). இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டு, சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.

ஞானசெல்வம் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஞானசெல்வம், வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். புற்றுநோய் கட்டி முற்றிய நிலையில், மருத்துவ சிகிச்சையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாததால், கடந்த 15 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்த ஞான செல்வம் தானாகவே டிஸ்சார்ஜ் செய்து கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஞானசெல்வத்திற்கு கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறக்கும் தருவாயில் இருந்தார். இதை பார்த்த மனைவி எஸ்தர் சரோஜினி மனமுடைந்து காணப்பட்டார். தனது கணவர் இறப்பதற்கு முன், தான் இறந்து விட வேண்டும் என்று முடிவு செய்த எஸ்தர் சரோஜினி, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே ஞான செல்வத்தின் வீடு திறக்கப்படாமல் இருந்த நிலையில், உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் புழல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, கணவன், மனைவி ஆகியோர் இறந்து கிடந்தனர். இதையடுத்து, போலீசார் இருவரது சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். காதலித்து கரம் பிடித்த கணவன் இறப்பதை காண முடியாமல் மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

The post புற்று நோயால் பாதித்த கணவன் உயிரிழப்பை பார்த்து காதல் மனைவி தற்கொலை: இறப்பிலும் இணைபிரியாத தம்பதி appeared first on Dinakaran.

Tags : united ,Puzhal ,Puzhal Vinayakapuram ,
× RELATED ஐக்கிய நாடுகள் தினத்தையொட்டி கொடியேற்றி கலெக்டர் மரியாதை