திட்டக்குடி, ஜூன் 22: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் திட்டக்குடி தொலைதூர மற்றும் இணையவழி கல்வி மையத்தின் 2023-24ம் கல்வி ஆண்டுக்கான இளங்கலை மற்றும் முதுகலை தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இத்தேர்வை சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதி வருகின்றனர். இந்நிலையில் கல்வி கற்பதற்கு வயது தடை இல்லை என்பதை நிரூபிக்கும் வகையிலும், மற்ற இளைஞர்களுக்கு முன் உதாரணமாகவும் திட்டக்குடி மையத்தில் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த வீரராகவன் (81) என்பவர் தேர்வு எழுதினார். இவர் தமிழ்நாடு அரசின் தொழில் வணிக துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். வயது நிரம்பிய இவர் நேற்று எம்ஏ ஆங்கிலம் முதலாம் ஆண்டு தேர்வு எழுதினார். இவருக்கு ஒருங்கிணைப்பாளரும், முதன்மை கண்காணிப்பாளருமான லெனின் மற்றும் மாணவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தற்போது ஒரு சில இளைஞர்கள் கல்வி பெறுவதற்கே ஆர்வமற்று இருக்கும் நிலையில் 81 வயது நிரம்பிய முதியவர் ஒருவர் எம்ஏ தேர்வு எழுதியது அப்பகுதி மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
The post திட்டக்குடியில் எம்ஏ தேர்வு எழுதிய 81 வயது முதியவர் appeared first on Dinakaran.