×
Saravana Stores

நீட் தேர்வில் தவறு நடந்திருந்தால் ஒத்துக்கொள்ள வேண்டும்: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!

டெல்லி: நீட் முறைகேடு வழக்கில் ஒன்றிய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை 2 வாரங்களில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடப்பாண்டு நீட் தேர்வு கடந்த மாதம் 5ம் தேதி நடத்தப்பட்டு, ஜூன் 4ம் தேதி தேர்வு முடிவுகள் வௌியாகின. இந்த தேர்வில் வினாத்தாள் கசிவு, ஒரே மாநிலத்தில் அதிகம் பேர் 720க்கு 720 மதிப்பெண் பெற்று தேர்ச்சி, கருணை மதிப்பெண்கள் வழங்கியது உள்ளிட்ட விவகாரங்கள் நீட் தேர்வு முறைகேடு குறித்த பிரச்னைகளை பூதாகரமாக்கி உள்ளன. இதை எதிர்த்து ஏராளமான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த நிலையில் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேசியத் தேர்வுகள் முகமைக்கு நோட்டீஸ் அனுப்பியது. கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1,563 பேருக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று தேசியத் தேர்வுகள் முகமை உறுதி அளித்தது. கருணை மதிப்பெண்கள் இல்லாமல் அவர்கள் பெற்ற மதிப்பெண்களே உண்மையான மதிப்பெண்களாக இருக்கும் எனவும் விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் இந்தத் தேர்வை எழுதினால் போதும் எனவும் தெரிவிக்கப்பட்டது. நீட் மறு தேர்வை எழுதும் மாணவர்களுக்கு, ஜூன் 23ம் தேதி தேர்வு நடைபெற உள்ளது.

ஜூன் 30ம் தேதிக்கு முன்னதாகத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தேசிய தேர்வுகள் முகமை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது; நீட் தேர்வில் தவறு இருந்தால் ஒன்றிய அரசும் தேசிய தேர்வு முகமையும் ஒப்புக்கொள்ள வேண்டும். நீட் தேர்வு நடத்துவதில் யார் மீதும் 0.001% தவறு இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு நடந்திருந்தால் அதனை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும், மருத்துவம் படிக்கும் மாணவர்கள் தவறு இழைப்பது சமூகத்துக்கு ஆபத்து. மோசடி செய்த ஒருவர் மருத்துவராக மாறுவதை கற்பனை செய்து பாருங்கள்.

அத்தகைய நபர்களால் சமூகத்திற்கு ஆபத்து ஏற்பட நேரிடும்; இது குறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக ஒன்றிய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை 2 வாரங்களில் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

The post நீட் தேர்வில் தவறு நடந்திருந்தால் ஒத்துக்கொள்ள வேண்டும்: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Union Government ,Delhi ,National Examinations Agency ,Dinakaran ,
× RELATED பொது இடங்களில் மாற்று...