×

போதைப்பொருள் பழக்கம் சமுதாயத்தின் மிகப்பெரிய எதிரி

புதுச்சேரி, ஜூன் 18: புதுச்சேரி என்சிசி தலைமையகம் சார்பில் ஆண்டுதோறும் கடற்படை பிரிவு மாணவர்களின் கடல் சாகச பயணம் நடைபெறும். இந்தாண்டு சமுத்ர சக்தி என்ற பெயரில் பாய்மர படகில் கடல் சாகச பயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்த கடல் சாகச பயண துவக்க விழா கடந்த 7ம் தேதி தேங்காய்திட்டு துறைமுகத்தில் நடந்தது. இதில் கடற்படை பிரிவு முதுநிலை மாணவர்கள் – 35 பேர், மாணவிகள் – 25 பேர் கலந்து கொண்டு 302 கி.மீ. தூரம் பயணம் மேற்கொண்டனர். இந்த பயணம் தேங்காய்திட்டு துறைமுகத்தில் தொடங்கி கடலூர், பரங்கிபேட்டை, பூம்புகார் வழியாக காரைக்கால் சென்று, மீண்டும் அதே வழியில் நேற்று காலை தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் நிறைவடைந்தது. கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து மாணவர்களின் கடல் சாகசப் பயணத்தை நிறைவு செய்து வைத்தார்.

நிகழ்ச்சியில், பாஸ்கர் (எ) தட்சணாமூர்த்தி எம்எல்ஏ, உதவி தலைமை இயக்குநர் கமோடர் அதுல் குமார் ரஸ்தோகி, தேசிய மாணவர் படையின் குரூப் கமாண்டர் மேனன், கமாண்டிங் அதிகாரி அருண் நாட் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக, தேசிய மாணவர் படை மாணவர்கள் கவர்னருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கினர். தொடர்ந்து கமாண்டிங் அதிகாரி அருண் நாட் இந்த 10 நாள் கடல் சாகச பயணம் குறித்த விவரங்களை புகைப்படங்கள் மூலமாக கவர்னருக்கு விளக்கினார்.

பின்னர், மாணவர்கள் மத்தியில் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: இந்த கடல் சாகச பயணம் மூலம் மாணவர்களின் மனவலிமையும் உடல்வலிமையும் மேம்பட்டிருக்கும். இதில் மாணவர்களுக்கு நீச்சல், படகுகளை இழுத்தல், ஆழ்கடல் பாய்ச்சல் (ஸ்கூபா டைவிங்) போன்ற பயிற்சி அளிக்கப்பட்டு இருப்பதாக அறிகிறேன். மாணவர்கள் தங்களது வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய சவால்களையும் எதிர்கொள்வதற்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள இந்த கடல் பயணம் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இந்த கடல் பயணம் மாணவர்களுக்கு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தரக்கூடியதாக இருந்திருக்கும். அதோடு மாணவர்கள் கடற்கரை தூய்மைப்படுத்தல், மரம் நடுதல், ரத்த தானம், நெகிழி ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், முதியோர் இல்லத்தில் சேவை செய்தல் போன்ற சமூக சேவை பணிகளிலும் ஈடுபட்டார்கள் என்பது பாராட்டுக்குரிய ஒன்று. இன்று போதைப்பொருள் பழக்கம் சமுதாயத்தின் மிகப்பெரிய எதிரியாக மாறி இருக்கிறது. இளைஞர்கள் தங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே அதில் சிக்கிக் கொள்கிறார்கள். போதைப்பொருள் ஒழிப்பில் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் அது பற்றிய விழிப்புணர்வு சமுதாயத்தில் ஏற்படாத வரை அதை முற்றிலுமாக ஒழிப்பது என்பது சாத்தியமில்லை. அந்த வகையில் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் ஏற்படுத்தி இருப்பதும் பாராட்டுக்குரியது. இவ்வாறு அவர் பேசினார்.

The post போதைப்பொருள் பழக்கம் சமுதாயத்தின் மிகப்பெரிய எதிரி appeared first on Dinakaran.

Tags : Puducherry ,NCC Headquarters ,Samudra Shakti ,
× RELATED புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட சரக்கு வாகன டிரைவர்கள்