×

மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் பலி

திருவெண்ணெய்நல்லூர், ஜூன் 23: திருவெண்ணெய்நல்லூர் அருகே வயல்வெளி மோட்டார் பம்ப் செட்டில் குளித்துக் கொண்டிருந்த 2 சிறுவர்கள் மீது மின்கம்பி அறுந்து விழுந்ததால், சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள தடுத்தாட்கொண்டூர் கிராமத்தை சேர்ந்த வினோத் -விஜயலட்சுமி தம்பதியின் மகன் சப்தகிரி (11). தடுத்தாட்கொண்டூர் உயர்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான். இதே பகுதியை சேர்ந்த கலியபெருமாள்-சூர்யா தம்பதியின் மகன் லோகேஷ் (8). தடுத்தாட்கொண்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தான். இவர்கள் இருவரும் உறவினர்கள். 2 சிறுவர்களும் நேற்று மதியம் தடுத்தாட்கொண்டூர் வயல்வெளியில் உள்ள நீர் மோட்டார் பம்ப்செட்டில் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது மேலே ஒரு கம்பத்திலிருந்து மற்றொரு கம்பத்திற்கு செல்லும் மின் கம்பி அறுந்து இவர்கள் மேல் விழுந்து தண்ணீரில் மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர்கள் இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இதை கண்டு அங்கிருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்க முயன்றனர். ஆனால் அதற்கு முன் அவர்கள் உயிரிழந்து விட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் வட்டாட்சியர் ராஜ்குமார், விழுப்புரம் எஸ்பி சுரேஷ், திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Thiruvenneynallur ,Vinod ,Thaduthatakondur village ,Thiruvennainallur ,Villupuram district ,
× RELATED பம்ப் செட்டில் குளித்தபோது மின்சாரம் பாய்ந்து 2 சிறுவர்கள் சாவு