×

புராதன சின்னங்களை சுற்றி பார்க்க மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்: போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் அவதி


சென்னை: மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், உள்ளூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்க்க விடுமுறை நாளான நேற்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கார், வேன், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் தங்களது குடும்பத்தோடு குவிந்தனர். இவர்கள், வருகையால் மாமல்லபுரத்தின் முக்கிய வீதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. மேலும், புராதன சின்னங்களை கண்டு ரசித்தும், செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும், மாமல்லபுரத்துக்கு ஏராளமான சுற்றுலா வாகனங்கள் படையெடுத்ததால் கிழக்கு ராஜவீதி, கடற்கரை செல்லும் சாலை, ஐந்து ரதம் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் வெளியேற முடியாமல் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து நீண்ட தூரம் நின்றது. இதனால், உள்ளூர் மக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

காலையில் இருந்து மதியம் வரை குறைந்த எண்ணிக்கையிலேயே பயணிகள் வாகனங்களில் வந்தனர். மதியம் 2 மணிக்கு மேல் ஏராளமான வாகனங்களில் பயணிகள் வரத் தொடங்கினர். இதனால், இசிஆர் நுழைவுவாயில் பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடைகளை வழிமறித்து வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் வியாபாரிகள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்த பயணிகள் ஏராளமானோர் கடற்கரைக்கு சென்றதால் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும், ஒரு சில சுற்றுலாப் பயணிகள் ஆபத்தை உணராமல் கடலில் இறங்கி குளித்தனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால் மாமல்லபுரத்தின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், உள்ளூர் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் வசதிக்கென 200 வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தம் அமைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.மேலும், இதுதொடர்பாக வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘மாமல்லபுரம் நகருக்கு தினமும் ஏராளமான உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வாகனங்கள் வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வரும் வாகனங்களுக்கு தற்போது பேரூராட்சி நிர்வாகம் மூலம் காருக்கு ₹75, வேன் மற்றும் பஸ்சுக்கு ₹100, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லாததால் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். இதனால், வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகிறது. இதனை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வாகன நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

கூடுதல் போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும்
மாமல்லபுரத்தில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போதிய அளவு போக்குவரத்து போலீசார் இல்லாததால் முக்கிய சாலைகளில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனால், உள்ளூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். போக்குவரத்து சீர் செய்யும் பணியில் கூடுதல் போலீசாரை ஈடுபடுத்த வேண்டும், என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

The post புராதன சின்னங்களை சுற்றி பார்க்க மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்: போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,CHENNAI ,Tamil Nadu ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரை கோயில்...