×

வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.4,19,359 கோடி வருவாய்: அமைச்சர் மூர்த்தி தகவல்

சென்னை: தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் கடந்த 3 ஆண்டுகளில் வணிகவரித் துறையும், பதிவுத் துறையும் சேர்ந்து மொத்தமாக ரூ.4 லட்சத்து 19 ஆயிரத்து 359 கோடி வரி வருவாய் ஈட்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை மானிய கோரிக்கை மீதான மீதான விவாதத்தில் பதிலளித்து அமைச்சர் மூர்த்தி பேசியதாவது: வணிகவரித் துறையின் வருவாய், 2021-2022-ம் நிதியாண்டில் ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகை ரூ.7 ஆயிரத்து 736 கோடியை சேர்த்து, ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 93 கோடியாக உயர்ந்தது. அதுவே, 2022-2023-ம் நிதியாண்டில், ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகை ரூ.16 ஆயிரத்து 215 கோடியை சேர்த்து, ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 650 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.

மேலும், 2023-2024-ம் நிதியாண்டில், 30.6.2022-க்கு பின்னர் ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகை மத்திய அரசால் நிறுத்தப்பட்ட நிலையிலும், வணிகவரித் துறை தனது தொடர் முயற்சிகளின் மூலம், ஜி.எஸ்.டி. நிலுவை இழப்பீட்டுத் தொகை ரூ.4 ஆயிரத்து 574 கோடியை சேர்த்து, ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 580 கோடி வரி வருவாய் ஈட்டியது. இந்த வகையில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்னர் கடந்த 3 ஆண்டுகளில் வணிகவரித் துறையானது திரளாக ரூ.3 லட்சத்து 69 ஆயிரத்து 323 கோடி வரி வருவாயை ஈட்டியுள்ளது. தி.மு.க. அரசு பொறுப்பேற்ற போது, ரூ.10 ஆயிரத்து 643 கோடியாக இருந்த பத்திரப் பதிவுத் துறையின் வருவாய், 2021-2022ம் நிதியாண்டில் கூடுதலாக ரூ.3 ஆயிரத்து 270 கோடி ஈட்டியதால், அந்த ஆண்டின் மொத்த வருவாய் ரூ.13 ஆயிரத்து 913 கோடியாக உயர்ந்தது.

2022-2023ம் நிதியாண்டில், 2020-2021ம் ஆண்டைவிட கூடுதலாக ரூ.6 ஆயிரத்து 654 கோடி ஈட்டியதால் ரூ.17 ஆயிரத்து 297 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. மேலும், 2023-2024ம் நிதியாண்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்ட போதிலும், 2020-2021-ம் ஆண்டைவிட ரூ.8 ஆயிரத்து 182 கோடி கூடுதலாக ஈட்டியதால் கடந்த ஆண்டில் பதிவுத் துறையின் வருவாய் ரூ.18 ஆயிரத்து 825 கோடியாக உயர்ந்தது. இவ்வகையில், கடந்த 3 ஆண்டுகளில் திரளாக ரூ.50 ஆயிரத்து 36 கோடி வருவாய் ஈட்டி பதிவுத்துறை சாதனை படைத்துள்ளது. இவ்வாறாக, தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்னர் கடந்த 3 ஆண்டுகளில் வணிகவரித் துறையும், பதிவுத் துறையும் சேர்ந்து மொத்தமாக ரூ.4 லட்சத்து 19 ஆயிரத்து 359 கோடி வரி வருவாய் ஈட்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

The post வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.4,19,359 கோடி வருவாய்: அமைச்சர் மூர்த்தி தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Murthy ,Chennai ,DMK ,Tamil Nadu… ,Dinakaran ,
× RELATED பத்திரப்பதிவு முடிந்த நாளிலேயே...