×

வரும் 20ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடியின் பயணம் திடீர் ரத்து: சபாநாயகர் தேர்தலில் சிக்கல் நீடிப்பதால் ஒத்திவைப்பு என தகவல்

சென்னை: வரும் 20ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடியின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. சபாநாயகர் தேர்தலில் சிக்கல் நீடிப்பதால் அவரது பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மக்களவை தேர்தலையொட்டி பிரதமர் மோடி தமிழகத்திற்கு 9 முறை தேர்தல் பிரசாரத்திற்காக வந்தார். அவர் மட்டுமல்லாமல் ஒன்றிய அமைச்சர்கள், பாஜ மாநில முதல்வர்கள் என்று அடுத்தடுத்து தமிழகத்திற்கு படையெடுத்து வந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், தமிழகத்தில் பாஜ கூட்டணியால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. இது பாஜகவுக்கு பெருத்த அடியாக பார்க்கப்பட்டது. அதே நேரத்தில் மக்களவை தேர்தலில் பாஜ கூட்டணி வெற்றி பெற்றது. இந்திய பிரதமராக 3வது முறையாக நரேந்திர மோடி பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக வருகிற 20ம் தேதி (வியாழக்கிழமை) தமிழகம் வர இருந்தார்.

அன்றைய தினம் காலை 10 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடக்கும் பிரமாண்ட விழாவில் கலந்து கொண்டு சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இடையேயும், மதுரை-பெங்களூருக்கு சென்னை வழியாக வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழா, மேலும் காணொலி காட்சி வாயிலாக ஆரல்வாய்மொழி-நாகர்கோவில் மற்றும் மேலப்பாளையம்-நெல்லை இரட்டை வழி தடம், நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையிலான இரட்டை வழி தடத்தையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என கூறப்பட்டது.

மேலும் சென்னை பேசின்பிரிட்ஜ் பகுதியில் வந்தே பாரத் ரயில் பெட்டிகளுக்கான புதிய பராமரிப்பு பணிக்கான அடிக்கல்லையும் நாட்ட இருந்தார். மேலும் பல்வேறு திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழா, தொடக்க விழாவிலும் பங்கேற்க இருந்தார். இந்த நிலையில் வரும் 20ம் தேதி பிரதமர் மோடியின் சென்னை வருகை திடீரென ஒத்திவைக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. நிர்வாக காரணங்களுக்காக, பிரதமர் மோடியின் சென்னை வருகை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி பின்னர் நடைபெறும் என்றும் பாஜ துணை தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் பதவியை பிடிக்க கூட்டணியில் இடம் பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆகிய இருவரும் தீவிரமாக காய்நகர்த்தி வருகின்றனர். அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் சபாநாயகர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது.

இதனால் ஒன்றிய பாஜக அரசில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை தேர்தலின் போது சில கட்சிகள் மாற்றி வாக்களித்து விடுமோ என்ற பயம் பாஜவுக்கு இருந்து வருகிறது. இதுபோன்ற காரணம் மற்றும் 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24ம் தேதி தொடங்கி ஜூலை 3ம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடர்ந்து ஜூன் 26ம் தேதி சபாநாயகர் பணிக்கான தேர்தல் பணிகள் தொடங்க உள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் மோடி தமிழகம் வருவதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால்தான் பிரதமரின் சென்னை பயணம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் பிரதமர் தொடங்கி வைக்க இருந்த அனைத்து திட்டங்களும் தயார் நிலையின்தான் இருக்கிறது. இந்நிலையில் பிரதமரின் வருகை ரத்தால், இந்த திட்டப்பணிகள் எப்போது தொடங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

The post வரும் 20ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடியின் பயணம் திடீர் ரத்து: சபாநாயகர் தேர்தலில் சிக்கல் நீடிப்பதால் ஒத்திவைப்பு என தகவல் appeared first on Dinakaran.

Tags : Modi ,Chennai ,Speaker ,PM Modi ,Tamil Nadu ,Lok Sabha elections ,
× RELATED சபாநாயகர் நியமன விவகாரம்.....