×

மக்களவையில் துணை சபாநாயகர் பதவி தராவிட்டால் சபாநாயகர் பதவிக்கு இந்தியா கூட்டணி போட்டி: மோடி அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் அதிரடி முடிவு

புதுடெல்லி: மக்களவையில் துணை சபாநாயகர் பதவி ஒதுக்கப்படாவிட்டால், சபாநாயகர் தேர்தலில் போட்டியிட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மக்களவை தேர்தலில் பாஜவை எதிர்த்து ஓரணியில் திரண்ட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மகத்தான செயல்பாட்டை தந்துள்ளனர். தற்போது தேர்தலுக்கு அடுத்தபடியாக, அடுத்தகட்ட பலப்பரீட்சைக்கு அவர்கள் தயாராகி உள்ளனர்.

ஒன்றியத்தில் பாஜ தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 24ம் தேதி தொடங்கி ஜூலை 3ம் தேதி வரை நடக்க உள்ளது. ஒன்பது நாட்கள் நடக்கும் இந்த சிறப்பு கூட்டத்தொடரில், சபாநாயகர் தேர்தலுக்கான பணிகள் வரும் 26ம் தேதி தொடங்க உள்ளது. கடந்த மக்களவையில் பாஜவின் ஓம் பிர்லா சபாநாயகராக இருந்த நிலையில், துணை சபாநாயகர் பணியிடம் நிரப்பப்படாமல் காலியாக இருந்தது. பொதுவாக துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிக்கு ஒதுக்கப்படும்.

ஆனால், முந்தைய 2 மக்களவையிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எந்த கட்சியும் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறவில்லை. இதனால், யாருக்கும் துணை சபாநாயகர் பதவி தர வேண்டிய அவசியம் ஆளும் பாஜவுக்கு ஏற்படவில்லை. தற்போது 10 ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸ் 99 இடங்களுடன் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. இதனால் இம்முறை துணை சபாநாயகரை நியமிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகளால் அரசுக்கு அழுத்தம் தர முடியும்.

ஒருவேளை துணை சபாநாயகர் பதவி ஒதுக்கப்படாவிட்டால் நேரடியாக சபாநாயகர் பதவிக்கு போட்டியிடுவது என இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இம்முறை எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. பாஜ அதிகபட்சமாக 240 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. எனவே, மக்களவையை வழிநடத்தும் சபாநாயகர் பதவி என்பது 10 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சபாநாயகர் பதவி என்பது மக்களவை தலைவர் பதவியாகும். இவரே நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார். மக்களவை கமிட்டிகளும் அவரது தலைமையின் கீழ் தான் செயல்படுகின்றன. எனவே சபாநாயகர் பதவியை கைப்பற்றுவதில் எதிர்கட்சிகள் தீவிரமாக உள்ளன.

அதே சமயம் பாஜ கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி போன்ற கட்சிகளும் சபாநாயகர் பதவிக்கு குறிவைத்துள்ளன. இந்தியா கூட்டணி கட்சிகள் 233 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் சபாநாயகர் பதவிக்கு போட்டியிட்டால் பாஜவுக்கு கடும் சவாலாக இருக்கும். தேர்தலுக்குப் பிறகு பாஜவை நேரடியாக எதிர்க்கும் இந்தியா கூட்டணியின் அடுத்தகட்ட பலப்பரீட்சையாக இருக்கும். எனவே சபாநாயகர் பதவியை கைப்பற்றுவது யார்? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

* தெலுங்கு தேசத்திற்கு தந்தால் ஆதரவு தரலாம்
மக்களவை சபாநாயகர் பதவி தங்களுக்குதான் தர வேண்டுமென தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு தொடக்கத்தில் இருந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், சிவசேனா உத்தவ் அணி எம்பி சஞ்சய் ராவத் நேற்று அளித்த பேட்டியில், ‘‘மக்களவை சபாநாயகர் தேர்தல் இம்முறை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இப்பதவியை பாஜ பெற்றால், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வான் போன்ற கூட்டணி கட்சிகளை உடைத்து விடும்.

ஏற்கனவே பாஜவை நம்பியவர்களுக்கு நடந்த இந்த துரோகத்தை நாம் அனுபவித்துள்ளோம். சபாநாயகர் பதவி தெலுங்கு தேசத்திற்கு தரப்படுவதாக கேள்விப்பட்டேன். ஒருவேளை அப்படி நடந்தால், இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்தாலோசித்து, அனைவரும் ஏற்கும் பட்சத்தில், தெலுங்கு தேசத்திற்கு ஆதரவு தரலாம். அதே சமயம் நாடாளுமன்ற விதிமுறைப்படி, துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிக்கு ஒதுக்கப்பட வேண்டும்’’ என்றார்.

The post மக்களவையில் துணை சபாநாயகர் பதவி தராவிட்டால் சபாநாயகர் பதவிக்கு இந்தியா கூட்டணி போட்டி: மோடி அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் அதிரடி முடிவு appeared first on Dinakaran.

Tags : Speaker ,Lok Sabha ,India ,Modi government ,New Delhi ,Lok ,Sabha ,All India Party ,BJP ,Dinakaran ,
× RELATED அவைக் குறிப்பில் இருந்து பேச்சு...