×

பெசன்ட்நகர் கடற்கரையில் நடைபெற்ற சட்டவிரோத கட்டுமான பணிகள் தடுத்து நிறுத்தம்: மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் சட்டவிரோதமாக நடைபெற்று வந்த கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தடுத்து நிறுத்தினார். சென்னை பெசன்ட் நகர் கலாஷேத்ரா காலனியில் உள்ள அறுபடை வீடு முருகன் கோயில் அருகே, கடற்கரையில் ஆக்கிரமிப்பாளர்கள் வீடுகள் மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி மேற்கொண்டு வந்தனர். மேலும், கட்டுமான பணிகளுக்காக மண் அள்ளும் இயந்திரங்கள், செங்கல், போர்வெல் இயந்திரங்கள் கடற்கரையில் நிறுவப்பட்டு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.

தொழிலாளர்கள் தங்கி வேலைபார்ப்பதற்காக அங்கு 3 தகர கொட்டைகைகள் அமைக்கப்பட்டது. மேலும், கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக 2 சாலைகள் அமைக்கப்பட்டது. இதுதொடர்பாக செய்தி வெளியானது. இதனையடுத்து கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், சட்டவிரோத கட்டுமான பணிகளை தடுத்தி நிறுத்தினார். மேலும், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் கட்டுமான பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளை மாநகராட்சி அதிகாரிகள் மூடினர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘கடற்கரை பகுதியில் அனுமதியின்றி நடைபெறும் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தி உள்ளோம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும். கடற்கரையில் சாலைகள் அமைக்க முடியாது,’’ என்றனர். அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘கடற்கரையில் குப்பை கொட்டப்படுவதாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக மாநகராட்சியில் புகார் தெரிவித்து வருகிறோம். மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை சுத்தம் செய்வார்கள். ஆனால், லாரிகளில் மீண்டும் குப்பை கொட்டப்படும். கடற்கரையில் இருந்த இயற்கையான வெள்ள வடிகாலையும் குப்பையை கொட்டி மூடிவிட்டனர். இது முழுவதுமாக மூடப்பட்டால், கலாஷேத்ரா காலனி வெள்ளத்தில் மூழ்கும். கடற்கரையில் கட்டுமான பணிகள் நடந்தால் கடுமையான சுற்றுச்சூழல் விளைவுகள் ஏற்படுத்தும். இதனால் நன்னீர் உப்பாக மாறும், ஆமைகள் தங்கள் கூடு கட்டும் இடங்களை இழக்கும், மணல் அரிப்பு ஏற்படும் மற்றும் அதிக வெள்ள பாதிப்பு ஏற்படும். எனவே, இதுபோன்ற சட்ட விரோத கட்டுமன பணிகளை தடுக்க வேண்டும்,’’ என்றனர்.

The post பெசன்ட்நகர் கடற்கரையில் நடைபெற்ற சட்டவிரோத கட்டுமான பணிகள் தடுத்து நிறுத்தம்: மாநகராட்சி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Besantnagar beach ,CHENNAI ,Commissioner ,Radhakrishnan ,Veedum ,Besant Nagar Kalashetra Colony, Chennai ,Murugan Temple ,Dinakaran ,
× RELATED சென்னை பெருநகர காவல் ஆணையாளர்...