திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே பள்ளி வளாகத்தில் உலா வந்த சிறுத்தை பல மணி நேர போராட்டத்திற்குப்பின் பிடிபட்டது. திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தை ஒட்டியுள்ள தனியார் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை சிறுத்தை நுழைந்ததால் மாணவிகள், ஆசிரியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்பக்க நுழைவு வாயிலையொட்டி தனியாருக்குச் சொந்தமான பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளியின் ஒரு பகுதியில் வர்ணம் பூசும் பணிகள் நடந்து வருகிறது. இதில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று மாலை 4 மணியளவில் வர்ணம் பூசம் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது பள்ளி வளாகத்துக்குள் சிறுத்தை ஒன்று நுழைந்தது.அப்போது பள்ளி மைதானத்தில் இருந்த மாணவிகள், ஆசிரியர்கள் சிறுத்தையை கண்டதும் அலறி கூச்சலிட்டு தலைதெறிக்க ஓடினர். இந்த சத்தத்தை கேட்டதும் சிறுத்தை அங்கிருந்து பாய்ந்து ஓடியது.
அப்போது வர்ணம் பூசும்பணியில் இருந்த திருப்பத்தூர் அடுத்த புத்தகரம் பகுதியைச் சேர்ந்த கோபால் (52) என்பவரை சிறுத்தை தாக்கியது. இதில், அவரது இடதுப்புறம் தலையில் காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். உடனே பள்ளி நுழைவு வாயில் கதவு மூடப்பட்டது, தனியார் பள்ளியை ஒட்டியுள்ள சுற்றுச்சுவரை தாண்டி அருகேயுள்ள குடியிருப்புப் பகுதிக்குள் சிறுத்தை நுழைந்தது. அங்கு சென்ற சிறுத்தை மனிதர்களின் சத்தத்தை கேட்டதும் அங்குள்ள ஒரு வீட்டில் நுழைந்து அங்கேயே தஞ்சமடைந்தது. இதற்கிடையே வேலூர், ஒசூர் பகுதியில் இருந்து வனத்துறையினர் திருப்பத்தூருக்கு வரவழைக்கப்பட்டனர்.
3 பிரிவுகளாக பிரிந்த வனத்துறையினர் சிறுத்தையை பிடிப்பதற்கான முயற்சிகளை எடுத்தனர். இந்நிலையில் திருப்பத்தூரில் சிறுத்தை நுழைந்த தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட்ஜான், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து சிறுத்தை பிடிப்பதற்கான பணிகளை துரிதப்படுத்தி சிறுத்தை செயல்பாடுகளை கண்காணித்து வந்தனர். ஷெட்டில் சிறுத்தை இருந்த நிலையில் 2 கார்களில் இருந்த 5 பேர் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டது. வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திய நிலையில் 11 மணி நேரத்திக்குப் பின் சிறுத்தை பிடிபட்டது. மண்டல வன பாதுகாவலர், கால்நடை மருத்துவர் கொண்ட குழுவினர் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்திப்பிடித்தனர்.
The post திருப்பத்தூர் அருகே பள்ளி வளாகத்தில் உலா வந்த சிறுத்தை பல மணி நேர போராட்டத்திற்குப்பின் பிடிபட்டது: வனத்துறை தகவல் appeared first on Dinakaran.