×

இயக்கப்படும் பேருந்துகளுக்கான வரிகளை குறைக்க வேண்டும்

 

திருப்பூர், ஜூன் 15: தமிழ்நாடு அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில், சென்னையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் அமைப்புகளுடனான கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் திருப்பூர் ஆயத்த ஆடை தொழில் சார்பாக ஏற்றுமதியாளர்கள் சங்க இணை செயலாளர் குமார் துரைசாமி, திறன் மேம்பாட்டு துணைக்குழு தலைவர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது, சங்க இணை செயலாளர் குமார் துரைசாமி கோரிக்கைகள் குறித்து பேசியதாவது: தமிழ்நாடு அரசின் அடிப்படை கட்டமைப்பிற்கான மானியத்துடன், சிறிய தொழில் பூங்காக்களை அமைக்கும் மினி டெக்ஸ்டைல் பார்க் திட்டத்தில் எளிமையான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கினால் திருப்பூர் மாவட்ட கிராமப் பகுதிகளிலும் சிறு தொழில் பூங்காக்களை அதிக அளவில் அமைக்கக் கூடிய சாத்தியம் உள்ளது.

திருப்பூரைப் பொறுத்தவரை, ஏற்றுமதி நிறுவனங்களைச் சார்ந்த 3000க்கும் அதிகமான பேருந்துகள் மாவட்டம் முழுவதும் மட்டுமன்றி அருகிலுள்ள மாவட்டங்களுக்கும் தொழிலாளர்களை அழைத்து வருவதற்காக காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் இயக்கப்படுகிறது. இது பயனாளிகளுக்கு இலவசமாக இயக்கப்படுவதால், நபர் ஒன்றுக்கு ரூ.60 முதல் ரூ.80 வரை அன்றாடம் இங்குள்ள நிறுவனங்களால் செலவிடப்படுகிறது. இதன் காரணமாக உற்பத்தி செலவு கூடுகிறது. எனவே, ஒரு நாளில் இரு முறை மட்டும் தொழிலாளர்களுக்காக, இலவசமாக இயக்கப்படும் பேருந்துகளுக்கான வரிகளை, புதிய வரிவிதிப்பின் வாயிலாக தற்போதைய நிலையை காட்டிலும், தற்போது உள்ள நிலையிலிருந்து 75 சதவீதம் அளவுக்கு குறைக்க வேண்டும்.

திருப்பூரில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் ரூப் டாப் சோலார் வாயிலாக அமைக்கப்பட்ட மரபு சாரா மின் உற்பத்தி கட்டமைப்புகளை ஏற்படுத்தி நீண்ட நாட்களாக அதற்கான பிரத்தியேக அளவீட்டுக் கருவி மின் துறையினால் வழங்கப்படாததால், இயல்பான மின் கட்டணத்தையே செலுத்தி வருகின்றனர். இதனால், முதலீடு செய்து கட்டமைக்கப்பட்ட சோலார் மின் உற்பத்திக் கட்டமைப்பை உபயோகப்படுத்த இயலாமலேயே அசலும் வட்டியும் கட்டிக்கொண்டிருக்கக் கூடிய சூழலையும் மின்சாரத் துறையிடம் பரிந்துரைத்து உடனடியாக நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, மின் அளவீட்டுக் கருவிகளை வழங்க வேண்டும் புதிய வங்கிக் கொள்கை அறிமுகப்படுத்தப்படவேண்டும்.

தற்சமயம், மத்திய அரசு நிறுவனங்களுக்கு மாநில கொடுக்கும் மானியங்களை பெறும் அரசு அளிக்கும் மானியங்கள் வழங்கப்படுவதில்லை. உயர்ந்து வரும் டாலர் மதிப்பு, ஆயத்த ஆடை தொழிலுக்காக 95 சதவீதம் அளவிலான இயந்திரங்களை அதிக முதலீட்டில் இறக்குமதி செய்யப்படுவதன் காரணமாக, முதலீட்டு நெருக்கடியின் காரணமாக புதிய நிறுவனங்கள் உருவாவதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்த சிக்கலை களையும் வகையில், இரண்டு அரசுகள் கொடுக்கும் மானியத்தையும் பெற்றுக் கொள்வதற்கு வழி வகை செய்ய வேண்டும். ஏற்கனவே இந்த நடைமுறை குஜராத், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ளது. மேலும், தொழிலாளர்களுக்கான குடியிருப்பு, பருத்தி உற்பத்தி, வட்டி மானியம், மின் கட்டண குறைப்பு, பொது சுத்திகரிப்பு இவை அனைத்தையும் மரபு சாரா மின் உற்பத்தியின் கீழ் கொண்டு வருவதற்கு மானியத்துடன் கூடிய வட்டியில்லா கடன் வழங்கப்பட வேண்டும் . இவ்வாறு பேசினார். இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சரிடம் வழங்கினார்.

The post இயக்கப்படும் பேருந்துகளுக்கான வரிகளை குறைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Minister ,Small, ,Small ,and Medium ,Enterprises ,Government of Tamil Nadu ,Mr. ,Mo. ,Anparasan ,Tamil Nadu ,Chennai ,Dinakaran ,
× RELATED திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து