×

நீட் தேர்வில் முறைகேடு செய்தோருக்கு தண்டனை : இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தல்


ஈரோடு: ‘நீட் தேர்வில் முறைகேடு செய்தவர்களுக்கு தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தி உள்ளது. இந்திய மருத்துவ சங்கம் சார்பில் ‘சத்தத்துக்கான விழிப்புணர்வு’ எனும் தலைப்பில் ‘வாக்கத்தான்’ நிகழ்ச்சி நேற்று ஈரோட்டில் நடைபெற்றது. இதை இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் ஆர்.வி. அசோகன் ‘வாக்கத்தான்’ நிகழ்வை தொடங்கி வைத்தார்.

பெருந்துறை சாலை வழியாக ஐஎம்ஏ அரங்கில் வாக்கத்தான் நிறைவடைந்தது. தேசிய தலைவர் டாக்டர் ஆர்.வி.அசோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீட் தேர்வில் இதுவரை இல்லாத வகையில் முறைகேடுகள் நடந்துள்ளன. யாரெல்லாம், தவறு செய்தார்களோ அவர்கள் எல்லாம் தண்டிக்கப்பட வேண்டும். சிபிஐ விசாரணை வேண்டும். தவறு செய்தவர்களுக்கு தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும்.

லட்சக்கணக்கான மாணவர்களுக்கு சரியான தீர்ப்பு கிடைக்க வேண்டும். இப்பிரச்னை, தற்போது உச்சநீதிமன்றத்தில் உள்ளது. 1,563 மாணவர்கள் மட்டும் மீண்டும் தேர்வு எழுதுவது சரியான தீர்வு அல்ல. அதைவிட முக்கிய தீர்வை உச்சநீதிமன்றம் வழங்க வேண்டும். நீட் தேவையா?, மாநிலங்களுக்கு விலக்கு என்பது சர்ச்சைக்குரிய விஷயம். இது, ஒரு மாநிலம் மட்டும் பங்கு கொள்ளும் விஷயமல்ல. பல மாநிலங்களுக்கு பல அபிப்ராயங்கள் உள்ளன. இதில், உச்சநீதிமன்றம் மட்டுமின்றி, அனைத்து அரசுகளும், சேர்ந்து நமது குழந்தைகளுக்கு வழிகாட்ட வேண்டும். இதில், நாம் ஒருவர் மட்டுமே முடிவு எடுக்க முடியாது. ‘மெரிட்’ என்ற நிலைப்பாடும், ‘சமூக நீதி’ என்ற நிலைப்பாடும் உள்ளதால், இரண்டையும் சமமாக வைத்து தொலை நோக்கு சிந்தனையுடன் பார்க்க வேண்டும்.

இந்த தேர்வை நன்றாக நடத்த வில்லை. இதை, மிகச்சரியாக நடத்த நல்ல தீர்ப்புகள் தேவை. 650 மதிப்பெண் எடுத்தவரும் தேர்வாகிறார். 125 மதிப்பெண் எடுத்தவர் பணம் கொடுத்து மருத்துவப்படிப்பில் சேருகிறார். இதில், ‘மெரிட்’ என்ற நிலையில் சமரசத்துக்கு இடம் கொடுக்கக்கூடாது. வளர்ச்சிகள் வரும்போது நல்ல மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கிறோம். மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தால் மட்டும் மருத்துவமனை, டாக்டர்கள், நோயாளிகளுக்கு இடையேயான பிரச்னைக்கு தீர்வு காண முடியாது. டாக்டர்கள், நோயாளிகளுக்கான உறவு தகர்ந்துவிட்டது. அதற்கு, பல காரணங்கள் உள்ளன. சரியான முறையில் டாக்டர்கள் நடந்து கொள்ள வேண்டும் என ஐஎம்ஏ மூலமாக வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post நீட் தேர்வில் முறைகேடு செய்தோருக்கு தண்டனை : இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Indian Medical Association ,Erode ,Dinakaran ,
× RELATED சூதாடிய 5 பேர் கைது