×

கோவையில் இன்று திமுக முப்பெரும் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை; கூட்டணி கட்சி தலைவர்கள், 40 எம்.பி.க்கள் பங்கேற்பு

கோவை: கோவையில் இன்று திமுக முப்பெரும் விழா நடக்கிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். இவ்விழாவில், திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் 40 எம்.பி.க்கள் பங்கேற்கிறார்கள். தமிழ்நாட்டில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக அணி 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து, 2021ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதன்பிறகு நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் அமோக வெற்றி பெற்றது. தற்போது, நடந்து முடிந்துள்ள 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு-புதுவையில் 40க்கு 40 தொகுதிகளிலும் திமுக அணி வென்று, வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இதற்கு முழு காரணமாக இருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா, கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழா மற்றும் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா என முப்பெரும் விழா கோவை பீளமேடு கொடிசியா மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது. விழாவில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்ஸ்சிட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் 40 எம்.பி.க்கள் பங்கேற்கின்றனர்.

விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. விழா மேடை மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சி தலைவர்கள் ஒருபுறம் அமர்வதற்கும், தமிழ்நாடு-புதுவையில் இருந்து வரும் 40 எம்.பி.க்கள் மறுபுறம் அமர்வதற்கும் தனித்தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொண்டர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மைதானம் முழுவதம் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழா நடைபெற உள்ள அவினாசி சாலை விழாக்கோலம் பூண்டுள்ளது.

The post கோவையில் இன்று திமுக முப்பெரும் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை; கூட்டணி கட்சி தலைவர்கள், 40 எம்.பி.க்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : DMK ,Coimbatore ,Chief Minister ,M.K.Stal ,Alliance ,Tamil Nadu ,M.K.Stalin ,DMK Tripartum Festival ,
× RELATED திமுகவின் 40 எம்.பி.க்களும்...