×

புதுச்சேரி அமைச்சர் மகளுக்கு சொந்தமான இடத்தில் சந்தனகட்டைகள் பறிமுதல் சிபிஐ விசாரணை தேவை: முன்னாள் முதல்வர் வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரியில் வனத்துறை அமைச்சர் மகளுக்கு சொந்தமான இடத்திலிருந்து 6.2 டன் சந்தன கட்டைகளை பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின், இந்தியா கூட்டணி கட்சியினர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது.

நீட் தேர்வு முறைகேடுகள் பீகார் மற்றும் குஜராத் மாநிலத்தில் அதிகளவில் நடைபெற்றுள்ளது. நீட் தேர்வால் நாட்டில் பல உயிர்களை நாம் இழந்துள்ளோம். நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதை ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் ஏற்றுக்கொண்டுள்ளார். அதனால் உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்வால் ஏழை எளிய நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி அரசு மின்துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும்.

புதுச்சேரியில் வனத்துறை அமைச்சருடைய மகளுக்கு சொந்தமான இடத்தில் இருந்து சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6.2 டன் சந்தன கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை தமிழக வனத்துறை பறிமுதல் செய்துள்ளனர். எந்தவித அனுமதியும் இல்லாமல் அந்த தொழிற்சாலை இயங்கி வந்துள்ளது. இந்த விவகாரத்தில் புதுச்சேரி அரசிடமிருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். சந்தன கட்டைகள் விவகாரத்தில், தெளிவான அறிக்கையை புதுச்சேரி அரசு மத்தியில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post புதுச்சேரி அமைச்சர் மகளுக்கு சொந்தமான இடத்தில் சந்தனகட்டைகள் பறிமுதல் சிபிஐ விசாரணை தேவை: முன்னாள் முதல்வர் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : CBI ,Puducherry ,minister ,CM ,Former ,Chief Minister ,Narayanasamy ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...