×

மக்களவை தேர்தல் தோல்வியால் கடும் மோதல் அண்ணாமலை திடீரென தமிழிசையுடன் சமரசம்: மேலிடம் எச்சரித்ததால் நேரில் சந்தித்தார்

சென்னை: தமிழகத்தில் மெகா கூட்டணியை அமைத்து போட்டியிட்ட 19 தொகுதிகளிலும் பாஜ தோல்வியடைந்தது. தேர்தல் தோல்விக்கு பிறகு முன்னாள் மாநில பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும், அண்ணாமலையும் தோல்விக்கு யார் காரணம் என கடுமையாக மோதிக்கொண்டனர். இதனால் இருவரின் ஆதரவாளர்களும் ஒருவரை ஒருவர் சமூக வலைத்தளங்களில் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இது பாஜவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து டெல்லி சென்ற பாஜ தலைவர் அண்ணமலையை மேலிடம் கடுமையாக எச்சரித்தது. ஒழுங்காக கட்சி பணியை பாருங்கள். தேவையில்லாமல் பேசக்கூடாது என வாய்ப்பூட்டு போட்டது. இல்லாவிட்டால் தலைவர் பதவியில் இருந்து மாற்ற நேரிடும் என்று எச்சரித்தது.

இதையடுத்து டெல்லியில் இருந்து தமிழகம் திரும்பிய அண்ணாமலை, இனிமேல் ஏர்போர்ட்டில் எந்த பேட்டியும் கொடுக்க மாட்டேன். பேட்டி கொடுக்க வேண்டும் என்றால் சென்னையில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில்தான் பேட்டி கொடுப்பேன் என்று அறிவித்தார். தொடர்ந்து, இதுவரை அவர் பேட்டி எதுவும் கொடுக்கவில்லை. இந்நிலையில், ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்கும் விழாவில் கலந்துகொண்ட தமிழிசை சவுந்தரராஜனை, அமித்ஷா அழைத்துப் பேசினார். அப்போது, தமிழிசையை அமித்ஷா கண்டித்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது. இதற்கு பல்வேறு மகளிர் அமைப்பினர், நாடார் சமுதாயத்தினர் கண்டனம் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்தார். இந்த சர்ச்சைக்கு பிறகு பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று திடீரென சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்தார். இந்த சந்திப்பு சில நிமிடங்கள் நீடித்தது. அனைவரையும் அனுசரித்து செல்ல வேண்டும் என்ற டெல்லி மேலிடத்தின் எச்சரிக்கையை தொடர்ந்தே அண்ணாமலை தமிழிசையை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. மேலும் சர்ச்சை வெடித்தால் எங்கே மாநில தலைவர் பதவி பறிபோய் விடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே தமிழிசையை சமாதானப்படுத்தும் வகையில் திடீரென அண்ணாமலை நேரில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் தனது ஐடி விங்கினர் தமிழிசையை தவறாக சித்தரித்து பேசியதற்காகவும் மன்னிப்பு கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தலைமை சொன்னதால்தான் அதிமுக கூட்டணியை நாங்கள் விரும்பவில்லை. அதனால்தான் கூட்டணியில் இருந்து வெளியேறினோம். அதனாலேயே நானும் அப்படி நடந்து கொண்டேன். அதை நீங்கள் பொதுவெளியில் பேசியதால்தான் அமித்ஷா உங்களை கண்டிக்க வேண்டியதாயிற்று. உங்களுக்கு முக்கிய பொறுப்பு காத்திருக்கிறது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் பாஜ தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதளப் பதிவில், இன்றைய தினம் (நேற்று) மூத்த பாஜ தலைவர்களில் ஒருவரும், தமிழக பாஜ மாநில தலைவராக திறம்பட செயல்பட்டவருமான அக்கா தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி. தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காக கடினமாக உழைத்த அக்கா தமிழிசை சவுந்தரராஜன் அரசியல் அனுபவமும், ஆலோசனைகளும், கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தை தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

அண்ணாமலையின் பதிவை பகிர்ந்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜன், ‘தமிழக பாஜ மாநில தலைவர் அன்புத்தம்பி அண்ணாமலை சந்தித்ததில் மகிழ்ச்சி’ என்று தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் முடிந்த பின்னர் மோதலில் ஈடுபட்ட இருவரும் சந்தித்து பேசியது தற்போது பாஜவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் அண்ணாமலை தன்னை எதிர்த்த யாரையும் விட்டு வைத்ததில்லை. இதனால் தற்போது பதுங்குகிறவர் பாய்வதற்குதான். அவரிடம் உஷாராக இருங்கள் என்று தமிழிசையை அவரது ஆதரவு நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.

The post மக்களவை தேர்தல் தோல்வியால் கடும் மோதல் அண்ணாமலை திடீரென தமிழிசையுடன் சமரசம்: மேலிடம் எச்சரித்ததால் நேரில் சந்தித்தார் appeared first on Dinakaran.

Tags : Lok Sabha elections ,Annamalai ,Tamilisai ,CHENNAI ,BJP ,Tamil Nadu ,Tamilisai Soundararajan ,Lok Sabha ,
× RELATED மக்களவை தேர்தல் தோல்வியில் வெடித்த...