×

ராயப்பேட்டை அரசு மருத்துவமனை டாக்டர் சுப்பையா மீது நர்ஸ்கள் பரபரப்பு பாலியல் புகார்

* உடை மாற்றும் அறையில் அத்துமீறி நுழைந்து தொந்தரவு

* ஓரிரு நாளில் விசாகா கமிட்டி மருத்துவ கல்வி இயக்குநரிடம் அறிக்கை

சென்னை: ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் துறை தலைவரான பாஜ பிரமுகர் சுப்பையா சண்முகம் பெண்கள் உடை மாற்றும் அறையில் அத்துமீறி நுழைந்து செவிலியர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் மீது, தற்போது மருத்துவமனை விசாகா கமிட்டி டாக்டர் சுப்பையா சண்முகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை புற்றுநோய் துறை பிரிவு தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம். அகில பாரத வித்தியார்த்தி பரிஷத்தின் (ஏபிவிபி) முன்னாள் தேசிய தலைவராகவும் இருந்தவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது வீட்டின் அருகே வசிக்கும் பெண் ஒருவர் வீட்டின் முன்பு குடிபோதையில் டாக்டர் சுப்பையா சண்முகம் சிறுநீர் கழித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு சம்பவம் தற்போது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடந்துள்ளது.

இதுகுறித்து ராயப்பேட்டை மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் கூறியதாவது: ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு டாக்டர் சுப்பையா சண்முகம் அறுவை சிகிச்சை முடிந்து வெளியே வந்தவர், அறுவை சிகிச்சை அறையின் அருகே செவிலியர்களின் உடை மாற்றும் அறைக்குள் அத்துமீறி நுழைந்தார். அப்போது அவருடன் அறுவை சிகிச்சையின் போது மருத்துவ உதவி செய்த செவிலியர் ஒருவரிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட செவிலியர் வெளியில் சொல்ல முடியாமல் இருந்தார். அப்போது நடந்த சம்பவத்தை சக செவிலியர்களிடம் கூறி அழுதார். பிறகு செவிலியர்கள் டாக்டர் மீது புகார் அளிக்க வேண்டும் என்றால் உரிய ஆதாரம் வேண்டும். எனவே ஆதாரத்தை திரட்டும் வகையில், யாருக்கும் தெரியாமல் செவிலியர்கள் உடை மாற்றும் அறையில் செல்போன் கேமரா வைத்துள்ளனர். அப்போது வழக்கம் போல் மீண்டும் டாக்டர் சப்பையா சண்முகம், செவிலியரிடம் தவறாக நடக்க முயன்றார்.

ஆனால் அந்த செவிலியர் சாதுரியமாக அவரிடம் இருந்து தப்பி வெளியே வந்துவிட்டார். பிறகு நடந்த சம்பவத்தை பாதிக்கப்பட்ட செவிலியர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஆயிஷாவிடம் வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்தனர். புகாரின்படி, கண்காணிப்பாளரான டாக்டர் ஆயிஷா, புற்றுநோய் துறை தலைவர் சுப்பையா சண்முகத்திடம் மருத்துவமனை விசாகா கமிட்டி விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்படி மருத்துவமனை விசாகா கமிட்டி, கடந்த 2 மாதத்திற்கு மேல் புகார் அளித்த செவிலியர்கள் மற்றும் டாக்டர் சுப்பையா சண்முகத்திடம் 3 முறைக்கு மேல் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

அதேநேரம் விசாகா கமிட்டியின் அறிக்கையை ஓரிரு நாளில் மருத்துவ கல்வி இயக்குநருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும், டாக்டர் சுப்பையா சண்முகம் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி விசாகா கமிட்டியின் அறிக்கையை நீர்த்து போக செய்ய பல வகையில் முயற்சி செய்து வருகிறார். இந்த விவகாரம் கடந்த 2 மாதங்களுக்கு மேல் வெளியில் தெரியாமல் ரகசியமாக இருந்து வந்த நிலையில், தற்போது சமூக வலைத்தளங்கள் மூலம் வெளியாகி உள்ளது. இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் மருத்துவ கல்வி இயக்குநரகம் சம்பந்தப்பட்ட டாக்டர் சுப்பையா சண்முகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு செவிலியர்கள் தெரிவித்தனர்.

ஆர்எஸ்எஸ்சின் ஒரு பிரிவான ஏபிவிபி மாநில தலைவராக டாக்டர் சுப்பையா உள்ளார். இவர், தான் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில், வயதான பெண்ணின் வீட்டின் முன்பு சிறுநீர் கழித்து அசிங்கப்படுத்தினார். இது குறித்து ஆதாரத்துடன் புகார் செய்யப்பட்டதால், அவர் கைது செய்யப்பட்டார். பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர், ஜாமீனில் வெளியில் வந்தவர், மீண்டும் பணியில் சேர்ந்தார். தற்போது அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ராயப்பேட்டை அரசு மருத்துவமனை டாக்டர் சுப்பையா மீது நர்ஸ்கள் பரபரப்பு பாலியல் புகார் appeared first on Dinakaran.

Tags : Rayapetta Govt Hospital ,Dr. ,Subbiah ,Visakha Committee ,Medical Education ,Chennai ,Rayapetta Government Hospital ,Subbiah Shanmugam ,
× RELATED நரம்பியல் நிபுணர் டாக்டர் சுப்பையா...