×

ரூ.5 கோடி செலவில் புதுப் பொலிவு பெறுகிறது சென்னை ‘அம்மா உணவகங்கள்’ : ருசியான புதிய உணவு வகைகளை அறிமுகம் செய்ய மாநகராட்சி திட்டம்!!

சென்னை : அம்மா உணவகங்களின் கட்டமைப்பை மேம்படுத்த மாநகராட்சி சார்பில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் சென்னை மாநகராட்சியில் முதன்முதலாக 2013-ம் ஆண்டு அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன. இங்கு இட்லி,பொங்கல்,சாம்பார் சாதம், கலவை சாதம், தயிர் சாதம், சப்பாத்தி உள்ளிட்ட உணவுகள் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. இவ்வாறு குறைவான விலையில் சென்னையில் பலர் அம்மா உணவங்களை நம்பி உள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு ஏழை மக்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், அம்மா உணவகம் மூலம் குறைந்த விலைக்கு உணவு வழங்குவதால் சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.140-கோடி செலவு ஏற்படுகிறது.

இந்த நிலையில், சென்னையில் அம்மா உணவகங்களை புதுப்பொலிவாக்கி, ருசியான புதிய உணவுகளை வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி, ரூ.5 கோடி செலவில் அம்மா உணவகங்களில் கட்டமைப்பை மேம்படுத்த பணிகளை தொடங்கியுள்ளது சென்னை மாநகராட்சி. அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சியில் உள்ள 399 அம்மா உணவகங்களின் தரத்தை மேம்படுத்த ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார். மேலும் மண்டல அதிகாரிகளுக்கு மாநகராட்சி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “அம்மா உணவகங்களின் கட்டடங்களை சீரமைத்து, வண்ணம் பூசி புதுப்பொலிவுடன் மாற்ற வேண்டும். அம்மா உணவகங்களில் பிரிட்ஜ், கிரைண்டர், மிக்ஸி மற்றும் சமையலறை பொருட்களை மாற்ற வேண்டும். அம்மா உணவகம் பற்றி புகார் வந்து, அவப்பெயர் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும். அம்மா உணவகங்களின் பயனாளிகளின் வருகையை அதிகரிக்க, ருசியான புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்த திட்டமிட வேண்டும்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ரூ.5 கோடி செலவில் புதுப் பொலிவு பெறுகிறது சென்னை ‘அம்மா உணவகங்கள்’ : ருசியான புதிய உணவு வகைகளை அறிமுகம் செய்ய மாநகராட்சி திட்டம்!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Amma ,Amma restaurants ,Chennai Corporation ,Chief Minister ,Jayalalithaa ,Amma restaurants' ,Dinakaran ,
× RELATED தண்ணீர் நிரம்பி இருப்பதால்...