×

‘மாப்பிள்ளையை எனக்கு பிடிக்கல…’ தாலி கட்டவந்தபோது தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்: சேலத்தில் சினிமாபோல் பரபரப்பு சம்பவம்

சேலம்: மாப்பிள்ளையை எனக்கு பிடிக்கல என கூறி தாலிகட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் அழகாபுரத்தை சேர்ந்த பி.இ.பட்டதாரி வாலிபர் ஒருவருக்கும், ஓமலூரை சேர்ந்த, இன்ஜினியராக வேலை பார்த்து வரும் இளம்பெண்ணுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்து நிச்சயதார்த்தம் செய்தனர். நேற்றுமுன்தினம் காலை ஏற்காடு அடிவாரம் பகுதியில் உள்ள முருகன் கோயிலில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இருவீட்டாரும் தடபுடலான ஏற்பாடுகளை செய்தனர்.

காலை 6 மணிக்கு திருமணம் நடக்க இருந்த நேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என மணப்பெண் அதிரடியாக கூறியதுடன் தாலி கட்டவந்தபோது அதனை தட்டிவிட்டுள்ளார். இதனால் மாப்பிள்ளை உள்பட இருவீட்டாரும் கடும் அதிர்ச்சியடைந்தனர். கோயில் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெண்ணின் பெற்றோர் என்ன காரணம் என கேட்டனர். அப்போது மணப்பெண், ‘மாப்பிள்ளை எனக்கு பிடிக்கவில்லை. இப்போது திருமணம் வேண்டாம்’ என பிடிவாதமாக கூறிவிட்டார்.

உடனே மாப்பிள்ளை வீட்டார், ‘‘பெண் பார்த்து தானே நிச்சயதார்த்தம் செய்தோம். பிடிக்கவில்லை என்றால் அப்போதே சொல்லியிருக்க வேண்டியது தானே?’’ என கேட்டனர். பெற்றோர் கெஞ்சி பார்த்தும் மணப்பெண் கேட்கவில்லை. இந்த விவகாரம் கன்னங்குறிச்சி போலீஸ் ஸ்டேசனுக்கு சென்றது. மணப்பெண்ணை அழைத்து போலீசார் தனியாக விசாரணை நடத்தினர். யாரையாவது காதலிக்கிறீர்களா? என கேட்டனர். ஆனால் யாரையும் காதலிக்கவில்லை என கூறிய மணப்பெண், பெற்றோர் வற்புறுத்தி இந்த திருமணத்தை ஏற்பாடு செய்ததாகவும், இதற்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்தேன்.

மறுத்தால் தற்கொலை செய்து கொள்வோம் என பெற்றோர் மிரட்டியதால் பேசாமல் இருந்ததாகவும் கூறினார். இதையடுத்து மணப்பெண்ணே பிடிக்கவில்லை என்பதால் யாரும் கட்டாயப்படுத்த முடியாது என போலீசார் கூறினர். திருமணத்திற்கு செலவான பணத்தை பெற்றுத்தருமாறு மாப்பிள்ளை வீட்டார் கேட்டனர். நீங்களே பேசி முடிவு செய்து கொள்ளுங்கள் என கூறியதுடன், எந்த பிரச்னையும் செய்யக் கூடாது என எழுதி வாங்கிக்கொண்டு இருதரப்பினரையும் போலீசார் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

The post ‘மாப்பிள்ளையை எனக்கு பிடிக்கல…’ தாலி கட்டவந்தபோது தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்: சேலத்தில் சினிமாபோல் பரபரப்பு சம்பவம் appeared first on Dinakaran.

Tags : Salem ,talikat ,Salem Alagapuram ,Omalur ,
× RELATED வாடகைக்கு பேசி ₹25 லட்சம் வாங்கிவிட்டு...