×

விவசாயிகளுக்கு டிராக்டர்கள்-கொத்து கலப்பைகள் ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ புதிய திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: ரூ.206 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் என்ற புதிய திட்டம், ரூ.25 கோடி மதிப்பீட்டில் குறைந்த வாடகையில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக டிராக்டர்கள், கொத்துக் கலப்பைகள் வழங்குதல் மற்றும் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் இளைஞர்களுக்கு டிராக்டர் இயக்க பயிற்சி என மொத்தம் ரூ.232 கோடி மதிப்பிலான திட்டங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில், 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் பயிரிட ரூ.20 கோடி நிதி ஒதுக்கீட்டில் 4000 மெ.டன் பசுந்தாள் உர விதைகளை விவசாயிகளுக்கு விநியோகம் செய்யும் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன்மூலம் சுமார் 2 லட்சத்திற்கும் மேலான விவசாயிகள் பயன்பெறுவர்.மேலும், வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் குறைந்த வாடகையில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக டிராக்டர்கள், கொத்துக் கலப்பைகள் மற்றும் ரோட்டவேட்டர்களை வழங்கிடும் வகையிலும், கிராமப்புற இளைஞர்களுக்கு டிராக்டர் இயக்குவதற்கு பயிற்சி அளித்திடும் வகையிலும் டிராக்டர்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என். நேரு, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ராஜகண்ணப்பன், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வா, வேளாண்மைத் துறை சிறப்பு செயலாளர் சங்கர், வேளாண்மைத் துறை இயக்குநர் முருகேஷ், தோட்டக்கலைத் துறை இயக்குநர் குமாரவேல் பாண்டியன், வேளாண்மைப் பொறியியல் துறை தலைமைப் பொறியாளர் முருகேசன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

The post விவசாயிகளுக்கு டிராக்டர்கள்-கொத்து கலப்பைகள் ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ புதிய திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Mannuir ,Mannuir Kappom ,Chief Minister ,M.K.Stalin ,CHENNAI ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…