×

காஞ்சியில் நடந்த சிறப்பு முகாமில் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை: கலெக்டர் வழங்கினார்

காஞ்சிபுரம்: சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகள், திருநம்பிகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிட ஏதுவாக, இதர நலத்திட்ட உதவிகள் வழங்கும் தொடர்புத்துறைகளும் ஒருங்கிணைந்து சிறப்பு முகாம் நடத்தி வருகிறது. இதில், திருநங்கைகளுக்கான அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டையில் திருத்தம் மற்றும் புதிய ஆதார் அட்டை வழங்குதல், வாக்காளர் அட்டை திருத்தம் மற்றும் புதிய அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை, திறன் பயிற்சி, இலவச வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை ஆகியவற்றினை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், சமூக நலத்துறை சார்பில் திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் கலந்துகொண்டு, திருநங்கைகளுக்கு தேசிய மற்றும் மாநில அடையாள அட்டைகளை வழங்கினார். இந்த, சிறப்பு முகாமில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 90க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்றனர்.

இம்முகாம் மூலம் திருநங்கைகளுக்கு அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை திருநங்கைகள், திருநம்பிகளுக்கு பெற்று பயனடைந்தனர். மேலும், இம்முகாமில் 7 திருநங்கைகளுக்கு மாநில அடையாள அட்டை, 12 திருநங்கைகளுக்கு தேசிய அடையாள அட்டை, 12 திருநங்கைகளுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை ஆகியவை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா, அரசு அலுவலர்கள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post காஞ்சியில் நடந்த சிறப்பு முகாமில் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Kanchi ,Kanchipuram ,Dinakaran ,
× RELATED காஞ்சியில் நடந்த சிறப்பு முகாமில்...