×

ஊரப்பாக்கம் – கூடுவாஞ்சேரி வரை சென்டர் மீடியன்களில் அள்ளப்படும் மண்: காற்றில் மரங்கள் வேரோடு சாலையில் சாயும் அபாயம், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

கூடுவாஞ்சேரி: ஊரப்பாக்கம் – கூடுவாஞ்சேரி வரையிலான நெடுஞ்சாலையில் உள்ள சென்டர் மீடியனில் பொக்லைன் இயந்திர மூலம் மண் அள்ளப்படுகிறது. இதனால், காற்றில் மரங்கள் சாலையில் சாயும் அபாயம் உள்ளது. இதனால், விபத்துக்கள் எற்படும் நிலையும் உள்ளது. எனவே, மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையான பெருங்களத்தூர் முதல் வண்டலூர், ஓட்டேரி, கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, வல்லாஞ்சேரி, தைலாவரம், காட்டாங்கொளத்தூர், மறைமலைநகர், சிங்கபெருமாள் கோயில், பரனுர் வரை உள்ள ஜிஎஸ்டி சாலையின் இரு புறங்களிலும் 8 வழி சாலை அமைக்கப்பட்டு வந்தது.

இதில், ஒரு சில பகுதிகளில் 8 வழி சாலையை அமைக்கப்படவில்லை. மேலும், சாலையோராங்களில் இருந்த பேருந்து நிறுத்தங்கள் அகற்றப்பட்டது. ஆனால், அதற்கு பதில் புதிய பேருந்து நிறுத்தங்கள் இதுவரை அமைக்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் கொளுத்தும் வெய்யிலிலும், மழை காலங்களிலும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜிஎஸ்டி சாலையில் உள்ள சென்டர் மீடியனில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ராட்சத டாரஸ் லாரிகளை வைத்து மண் அள்ளி வருகின்றனர்.

இதனால், மரங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘சென்டர் மீடியனில் வேப்பமரம், புளியமரம், புங்கை மரம், காட்டுவா மரம், அலரி ஆகியவை செங்கல்பட்டு வரை உள்ளன. செடிகள் தாம்பரம் அடுத்த இரும்புலியூர் முதல் செங்கல்பட்டு வரை உள்ளன.

இதில் கடந்த 2015ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது மரங்கள் அடித்து சென்று விடுகின்றன. மேலும் சூறாவளி காற்று வீசும்போது ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்து விடுகின்றன. இந்நிலையில், எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி தற்போது கடந்த சில நாட்களாக ஊரப்பாக்கத்தில் இருந்து கூடுவாஞ்சேரி வரை உள்ள சென்டர் மீடியனில் இருக்கும் மண்ணை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் டாரஸ் லாரிகளை வைத்து ஏற்றி செல்கின்றனர்.

இதில் அள்ளப்படும் மண் எங்கே ஏற்றி செல்கின்றனர் என்றும் தெரியவில்லை. மேலும் மரங்களை சுற்றி மண் அணைக்காமல் வேரோடு அள்ளி வருகின்றனர். இதில், தற்போது பருவ மழை முன்கூட்டியே பெய்ய தொடங்கினால் சென்டர் மீடியினில் உள்ள அனைத்து மரங்களும் தாக்கு பிடிக்க முடியாமல் விழும் அளவிற்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறையினரிடம் புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post ஊரப்பாக்கம் – கூடுவாஞ்சேரி வரை சென்டர் மீடியன்களில் அள்ளப்படும் மண்: காற்றில் மரங்கள் வேரோடு சாலையில் சாயும் அபாயம், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Urpakkam ,Guduvanchery ,Bokline ,Uruppakkam ,Guduvancheri ,Dinakaran ,
× RELATED தொடர் மின் வெட்டை கண்டித்து...