×

‘3வது முறையாக ஆட்சி அமைக்கிறார்’: ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு நாளை பதவியேற்பு.! பிரதமர் மோடி பங்கேற்கிறார்

திருமலை: ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி 3வது முறையாக நாளை ஆட்சி அமைக்கிறது. அக்கட்சியின் தலைவரான சந்திரபாபுநாயுடு முதல்வராக பதவியேற்கிறார். இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். ஆந்திராவில் 175 சட்டசபை, 25 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டது. எதிர்க்கட்சியான சந்திரபாபுநாயுடுவின் தெலுங்கு தேசம், பாஜக, நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனா ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் சந்திரபாபு, பவன்கல்யாண், பாஜக கூட்டணி மொத்தம் 164 இடங்களில் வெற்றி பெற்றது. பவன்கல்யாண் கட்சி 21 இடங்களில் வென்று ஆந்திராவில் 2வது பெரிய கட்சியாக உருவானது. 135 தொகுதிகளில் வெற்றி பெற்ற சந்திரபாபுநாயுடு ஆட்சியை கைப்பற்றினார். பாஜக 4 இடங்களில் வெற்றிபெற்றது. ஆனால் ஆளும் கட்சியாக இருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 17 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது.

இந்நிலையில் ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபுநாயுடு நாளை 3வது முறையாக பதவியேற்கிறார். இதையொட்டி கிருஷ்ணா மாவட்டம் கன்னவரம் விமான நிலையம் அருகே பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதற்காக அங்கு பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி விஜயவாடாவில் இன்று தெலுங்குதேசம், பாஜக, ஜனசேனா சார்பில் வெற்றி பெற்ற 164 எம்எல்ஏக்கள் அனைவரும் சேர்ந்து, சட்டப்பேரவைக் குழு தலைவராக சந்திரபாபுவை தேர்வு செய்கின்றனர். பின்னர் சந்திரபாபு, கவர்னர் அப்துல்நசீரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார். தொடர்ந்து நாளை லட்சக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் சந்திரபாபு ஆந்திர மாநில முதல்வராக பதவியேற்கிறார். அவருக்கு கவர்னர் அப்துல்நசீர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

அவருடன் எத்தனை அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள், யார் யார் அமைச்சர்கள் என்ற விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் பல மாநில, முதல்வர்கள், திரைபிரபலங்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். முதல்வராக சந்திரபாபு பதவியேற்ற பின்னர் கடந்த 2014ம் ஆண்டு அமராவதி தலைநகருக்காக பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட இடங்களின் தற்போதைய நிலை குறித்து பிரதமருக்கு விளக்கம் அளிக்க உள்ளார். தொடர்ந்து விரைவில் கூடுதல் நிதி வழங்கி, தலைநகர் பணிகள் தொடர்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி பிரதமருக்கு கோரிக்கை விடுக்கிறார். அதனை தொடர்ந்து நாளை இரவு திருப்பதிக்கு வரும் சந்திரபாபுநாயுடு நாளை மறுநாள் ஏழுமலையான் கோயிலில் குடும்பத்தினருடன் தரிசனம் செய்ய உள்ளார். இந்நிலையில் சந்திரபாபு நாயுடு தேர்தலின்போது ‘சூப்பர் 6’ என்ற பெயரில் தேர்தல் வாக்குறுதிகள் அளித்தார்.

அதில், தமிழ்நாட்டில் உள்ளது போல் பெண்களுக்கு கட்டணமில்லா பஸ் பயணம், முதியோர் உதவித்தொகை ₹3 ஆயிரத்தில் இருந்து ₹4 ஆயிரமாக உயர்த்தி வழங்குதல், ஆண்டுக்கு 3 சமையல் காஸ் சிலிண்டர்கள் இலவசம், 18 வயதுக்கு மேல் நிரம்பியவர்களுக்கு மகளிர் உரிமை தொகையாக ₹1800 உள்பட பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ள நிலையில், நாளை முதல்வராக பதவியேற்ற பின்னர் எந்த வாக்குறுதியை உடனே செயல்படுத்த முதல் கையெழுத்து போடுவார் என பொதுமக்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்திரபாபு நாயுடு எந்த ஒரு திட்டத்தை செயல்படுத்தினாலும், தொடங்கினாலும் முன்னதாக ஏழுமலையானை தரிசனம் செய்வது வழக்கம். அவ்வாறு முதல்வராக பதவியேற்ற பின் ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ‘3வது முறையாக ஆட்சி அமைக்கிறார்’: ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு நாளை பதவியேற்பு.! பிரதமர் மோடி பங்கேற்கிறார் appeared first on Dinakaran.

Tags : Chandrababu Naidu ,AP ,Modi ,Thirumalai ,Telugu Desam Party ,Andhra Pradesh ,Chandrababunayud ,Akkatsi ,PM Modi ,Dinakaran ,
× RELATED பழிவாங்கும் அரசியல் இருக்காது: இனி 3...