×

வங்கதேச அணிக்கு எதிராக வெற்றிபெற்றது அதிர்ஷ்டவசமானது: தென்ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் பேட்டி

நியூயார்க்: நியூயார்க்கில் நேற்றிரவு தென்ஆப்பிரிக்கா – வங்கதேசம் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்க அணி 23 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் டேவிட் மில்லர் – கிளாசன் கூட்டணி அணியை மீட்டெடுத்தது. இறுதியாக தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் சேர்த்தது. இதன்பின் வங்கதேசம் அணிக்காக தன்சித் ஹசன் – ஷான்டோ கூட்டணி தொடக்கம் கொடுத்தது. ரபாடா வீசிய 2வது ஓவரில் தன்சித் ஹசன் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். பவர் பிளே ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 29 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், மஹாராஜ் வீசிய முதல் பந்திலேயே லிட்டன் தாஸ் 9 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து வந்த அனுபவ வீரர் ஷகிப் அல் ஹசன் தேவையில்லாமல் நார்கியேவை அட்டாக் செய்ய முயன்று 3 ரன்களில் பரிதாபமாக வெளியேறினார்.

கேப்டன் ஷான்டோவும் 14 ரன்களில் ஆட்டமிழக்க, வங்கதேசம் 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 50 ரன்கள் மட்டுமே சேர்த்து தடுமாறியது. தொடர்ந்து மஹ்மதுல்லா – ஹிர்டாய் கூட்டணி பார்ட்னர்ஷிப் அமைத்தது. வங்கதேசம் வெற்றிக்கு 30 பந்துகளில் 31 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது 18வது ஓவரின் முதல் பந்தில் ஹிர்டாய் 34 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ரபாடா பவுலிங்கில் அவுட்டானார். இதனால் ஆட்டத்தில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது. பார்ட்மேன் வீசிய 19வது ஓவரில் 7 ரன்கள் சேர்க்கப்பட, கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவையாக இருந்தது. கடைசி ஓவரை மஹாராஜ் வீசினார். இந்த ஓவரின் 3வது பந்தில் ஜேக்கர் அலி 8 ரன்னில் ஆட்டமிழக்க, கடைசி 2 பந்தில் வெற்றிக்கு 6 ரன் தேவைப்பட்டது. 5வது பந்தில் மஹ்மதுல்லா அடித்த பந்தை பவுண்டரி லைனில் தரமான கேட்சை மார்க்ரம் பிடித்தார். இதனால் கடைசி பந்தில் 6 ரன் எடுக்க வேண்டிய நிலையில் வங்கதேசம் ஒரு ரன் மட்டுமே எடுத்ததால், தென்ஆப்பிரிக்கா அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலமாக குறைந்த ரன்களை டிஃபெண்ட் செய்த அணி என்ற இந்தியாவின் சாதனையை தென்ஆப்பிரிக்கா முறியடித்தது. வெற்றிக்கு பின் தென்ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் கூறுகையில், “சில சமயம் நாம் வெற்றியின் பக்கத்தில் நிற்போம்.

சில சமயம் தோல்வியடைவோம். ஆனால் இது ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்காக அமையும். இன்றைய ஆட்டத்தில் சில விஷயங்கள் எங்களுக்கு சாதகமாக நடந்தது. இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றதை அதிர்ஷ்டவசமாக நான் உணர்கின்றேன். முடிந்தவரை இது போன்ற சூழலில் போட்டியை கடைசிவரை இழுத்துச் செல்ல வேண்டும் என நினைக்கின்றேன். எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் நன்றாக செயல்பட்டார்கள். கடைசி வரை ஆட்டத்தை இழுத்துச் செல்ல நினைத்தோம். அப்போது யாரை பந்துவீச வைப்பது என்ற யோசனை வந்தபோது கேசவ் மஹாராஜிடம் வழங்கினோம். நாங்கள் எப்போதும் கிளாசன், டேவிட் மில்லரை மிகவும் நெருக்கடிக்கு ஆளாக்கின்றோம். ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்கள் சிறப்பாக பேட்டிங் செய்கிறார்கள். அவர்கள் தந்த பார்ட்னர்ஷிப் எங்களுக்கு வெற்றியை தேடி கொடுத்தது’’ என்றார்.

The post வங்கதேச அணிக்கு எதிராக வெற்றிபெற்றது அதிர்ஷ்டவசமானது: தென்ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,Markram Petty ,New York ,South Africa ,David Miller ,Clauson ,Markram ,Dinakaran ,
× RELATED 4 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா திரில் வெற்றி