×

கே.வி.குப்பத்தில் பக்ரீத் முன்னிட்டு ஆட்டுச்சந்தையில் வியாபாரம் அமோகம்

*ஒரு ஆடு ரூ.1.5 லட்சத்திற்கு விற்பனை

கே.வி.குப்பம் : பக்ரீத் பண்டிகை நெருங்கும் நிலையில் நேற்று கே.வி.குப்பம் ஆட்டுச்சந்தையில் ஆடுகள் வரத்து அதிகமாக இருந்ததால், வியாபாரம் அமோகமாக நடைபெற்றது. ஒரு ஆடு ₹1.5 லட்சம் வரை விற்பனையானது. வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று ஆட்டுச்சந்தை நடப்பது வழக்கம். இந்நிலையில் திங்கட்கிழமயான நேற்று காலை சந்தை வழக்கம்போல் கூடியது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான ஆடுகள் லோடு வேன் மூலம் அழைத்து வரப்பட்டன.

இதில் ஏராளமான வியாபாரிகள் போட்டிப்போட்டுக்கொண்டு ஆடுகளை கொண்டு வந்து வியாபாரம் செய்தனர். ஆடுகளின் தரத்திற்கேற்ப விலை நிர்ணயிக்கப்பட்டு விற்கப்பட்டது. வெள்ளாடுகள், முத்து கிடாய் ரகங்கள், நாட்டு ரக கிடாய்கள், செம்மறி ஆடுகள், என பல்வேறு ரகங்கள் கொண்ட ஆடுகள் அதிகம் கொண்டுவரப்பட்டிருந்தது. தற்போது, அடுத்த வாரம் திங்கள் பக்ரித் பண்டிகை வருவதால், இஸ்லாமியர்கள் விரும்பும் ஐதராபாத் வெள்ளை நிற செம்மறி ஆடுகள், ஜமுனாமுரி ரக ஆடுகள் அதிகம் தென்பட்டது. தலா ஒரு ஆடு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதில் கே.வி.குப்பம் அடுத்த தொண்டான் துளசி பகுதியை சேர்ந்த தரணி என்பவரின் செம்மறி ஆடு ₹1.5 லட்சம் விலைபோனது. இந்த ஆட்டிற்கு விலை பேச நீண்ட நேரம் பல்வேறு வியாபாரிகள் போட்டி போட்டனர். இறுதியாக சென்னை பகுதியை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் அதனை ₹1 லட்சத்து 48 ஆயிரத்துக்கு வாங்கி சென்றார். நேற்றைய சந்தையில் இந்த ஆடு தான் ஹாட் டாபிக் ஆனது.

அதுமட்டுமின்றி சில ஆடுகள் விலை ₹50 ஆயிரம், சில ஒரு ஜோடி ஆடுகள் ரூ.1 லட்சம் என விலை நிர்ணயம் செய்தனர். இதனால் வழக்கம் போல் இல்லாமல் வியாபாரம் களைகட்டியது. இதேபோன்று வருகின்ற வாரங்களில் கூடுதலாக வியாபாரம் களை கட்டும் என்று எதிர்பார்ப்பில் இருப்பதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

போக்குவரத்து நெரிசல்

இந்த சந்தையானது காட்பாடி – குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலைக்கு ஒட்டியே உள்ளது. வழக்கமாக 9 மணிக்கே வெறிச்சோடும் சந்தையானது, நேற்று மதியம் 12 வரை கூட்டம் குறையாமல் இருந்ததாலும், அவ்வழியாக சென்ற வாகனங்கள் சிறிது நேரத்திற்கு ஊர்ந்து சென்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சனிக்கிழமை சிறப்பு சந்தை

கே.வி.குப்பத்தில் வழக்கமான ஆட்டு சந்தையில் திங்கள் கிழமை நடைபெறுகிறது. இந்நிலையில், அடுத்த வாரம் திங்கட்கிழமை பக்ரித் பண்டிகை வருவதால் சனிக்கிழமை சிறப்பு ஆட்டுச்சந்தை நடைபெறும் என ஆட்டு சந்தை ஏலதாரர் தெரிவித்துள்ளார்.

The post கே.வி.குப்பத்தில் பக்ரீத் முன்னிட்டு ஆட்டுச்சந்தையில் வியாபாரம் அமோகம் appeared first on Dinakaran.

Tags : Pakreet ,KV Kuppam ,Bakrit festival ,Vellore district ,KV Kuppa ,Dinakaran ,
× RELATED பக்ரீத் பண்டிகை இன்று கோலாகல...