×

தியாகதுருகம் அருகே பரபரப்பு ஐடிஐ படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது

*மருந்தகத்துக்கு சீல் வைப்பு

தியாகதுருகம் : தியாகதுருகம் அருகே ஐடிஐ படித்து விட்டு போலி மருத்துவம் பார்த்து வந்த நபரை போலீசார் கைது செய்தனர். மருந்தகத்துக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல்
வைத்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த விருகாவூர் பகுதியில் கடந்த 10 வருடமாக கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த அன்பழகன் மகன் சரவணன் (49) என்பவர் மருந்தகம் மற்றும் பரிசோதனை மையத்துடன் சரவணா மெடிக்கல் என்ற பெயரில் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார். இங்கு முறையாக மருத்துவம் அளிக்கப்படவில்லை என சுகாதாரத்துறைக்கு புகார் கிடைத்துள்ளது.

இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) செந்தில்குமார், குடும்ப நலப்பணிகள் துணை இயக்குனர் நளினி உள்ளிட்ட மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு 3 நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து கொண்டிருந்ததும், மருந்தகத்தில் காலாவதியான மருந்துகளை வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த மாத்திரைகள், குளுக்கோஸ், ஊசி உள்ளிட்ட அனைத்து மருந்துகளும் கைப்பற்றப்பட்டு அந்த மருந்தகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் அங்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சையால் நோயாளிகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்து மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) செந்தில்குமார் வரஞ்சரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சரவணன் ஐடிஐ படித்து விட்டு போலியாக மருத்துவம் பார்த்து வருவதும் தெரியவந்தது. இவர் ஏற்கனவே 2017ம் ஆண்டு இதே வழக்கில் கைது செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து சரவணன் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.மருத்துவம் படிக்காமல் ஐடிஐ படித்து விட்டு போலி மருத்துவம் பார்த்து வந்த நபரை போலீசார் கைது செய்ததும், மருந்தகத்துக்கு சீல் வைத்த சம்பவமும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தியாகதுருகம் அருகே பரபரப்பு ஐடிஐ படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது appeared first on Dinakaran.

Tags : ITI ,Thyagathurugam ,Thiagadurugam ,Virugavur ,Kallakurichi district ,
× RELATED 4 கைதிகள் திருச்சி ஐடிஐயில் சேர்ந்து...