×
Saravana Stores

நீட் தேர்வு முறைகேடு; கவுன்சிலிங் நடத்த தடையில்லை: தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: நீட் தேர்வு தொடர்பான வழக்கில் கவுன்சிலிங் நடத்த இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டு நடந்த நீட் தேர்வு பீகார், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. நாடு முழுவதும் 67 பேர் நீட் தேர்வில் 720 மதிப்பெண்கள் பெற்றதால் சர்ச்சை எழுந்தது. கருணை மதிப்பெண்கள் என்ற பெயரில் 1500 பேருக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கி முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.

இவ்விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் பல மாநிலங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வினாத்தாள் கசிவு நடக்கவில்லை என்று தேர்வு முகமை தெரிவித்தது. நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அசானுதீன் அமானுல்லா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

நீட் குளறுபடி புகார்களால் தேர்வின் புனிதத் தன்மை மீது சந்தேகம் எழுந்துள்ளது என தெரிவித்த நீதிபதிகள், மருத்துவ கலந்தாய்வு நடத்த தடையில்லை. நீட் தேர்வு தொடர்பான அனைத்து வழக்குகளும் ஒன்றாக இணைத்து விசாரிக்கப்படும் என கூறினர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உத்தரவிட்டு நீட் குளறுபடி தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஜூலை 8-க்கு ஒத்திவைத்தனர்.

The post நீட் தேர்வு முறைகேடு; கவுன்சிலிங் நடத்த தடையில்லை: தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : NEET ,SUPREME COURT ORDERS NATIONAL SELECTION AGENCY ,Delhi ,Supreme Court ,Bihar ,Rajasthan ,National Selection Agency ,Dinakaran ,
× RELATED நீட் நுழைவுத் தேர்வை ஆன்லைன் மூலம்...