×

அலங்காநல்லூர் அருகே ஓட, ஓட விரட்டி வாலிபர் படுகொலை

அலங்காநல்லூர் : அலங்காநல்லூர் அருகே வாலிபரை ஓட ஓட விரட்டிச்சென்று வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கோவில்பாப்பாகுடியில் உள்ள சின்னக்கண்மாய் தெருவை சேர்ந்தவர் சூர்யா (24). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கஞ்சா வழக்கில் கைதான சூர்யா, ஒரு வாரத்திற்கு முன் ஜாமீனில் வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டில் இருந்தார். அப்போது அரிவாள், வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மர்மக் கும்பல் வீட்டிற்கு வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த சூர்யா, உயிரை காப்பாற்றிக்கொள்ள வெளியே ஓடினார். ஆனால் அந்த கும்பல் அவரை துரத்திச்சென்று சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியது.
இதுகுறித்து தகவல் அறிந்த அலங்காநல்லூர் போலீசார் சூர்யாவின் உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தை மதுரை எஸ்பி அரவிந்த், டிஎஸ்பி ஆனந்தகுமார் பார்வையிட்டனர்.

கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த படுகொலை பழிக்குப்பழியாக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

The post அலங்காநல்லூர் அருகே ஓட, ஓட விரட்டி வாலிபர் படுகொலை appeared first on Dinakaran.

Tags : Oda ,Alankanallur ,Surya ,Chinnakanmai Street, Kovilpappakudi ,Alankanallur, Madurai district ,
× RELATED வீட்டில் கஞ்சா பதுக்கி விற்ற ஏட்டு கைது