×

உலக கோப்பை தகுதிச் சுற்று கால்பந்து கத்தார்-இந்தியா மோதல் : 3வது சுற்றுக்கு முன்னேற கடைசி வாய்ப்பு

தோஹா: பிபா உலக கோப்பை-2026, ஆசிய கோப்பை-2027க்கான கால்பந்து தகுதிச் சுற்று ஆட்டங்கள் ஆசிய நாடுகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் வென்ற அணிகளுக்கு இடையிலான 2வது சுற்றின் கடைசி லீக் ஆட்டங்கள் இன்றுடன் முடிகின்றன.
ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் ஆசிய சாம்பியன் கத்தார் அணியை எதிர்கொள்கிறது. இந்திய அணி இதுவரை 5 ஆட்டங்களில் 5 புள்ளிகள் பெற்று (1 வெற்றி, 2 டிரா, 2 தோல்வி) 2வது இடத்தில் இருப்பதுடன், 3வது சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.

தோல்வியே சந்திக்காமல் முதல் இடத்தில் உள்ள கத்தார் (13 புள்ளி) அடுத்தச் சுற்று வாய்ப்பை ஏற்கனவே உறுதி செய்துவிட்டது. 3வது, 4வது இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் (5 புள்ளி) – குவைத் (4) அணிகள் தங்கள் கடைசி ஆட்டத்தில் இன்று மல்லுக்கட்டுகின்றன. இதில் வெல்லும் அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஆசிய சாம்பியன் கத்தாரை வீழ்த்தினால் இந்தியாவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம்.

கேப்டனாக இருந்த சாதனையாளர் சுனில் செட்ரி ஓய்வு பெற்ற நிலையில், புதிய கேப்டன் குர்பிரீத் சிங் (32) தலைமையில் இந்தியா களமிறங்குகிறது. கோல் கீப்பரான அவர் தனது தலைமையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஏதாவது அதிசயம் நிகழ்த்த முயற்சி செய்வார். சொந்த மண்ணில் நடப்பது கத்தாருக்கு சாதகம். அந்த அணி தோற்றாலும் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், இந்தியா தோற்றால் 2வது சுற்றுடன் வெளியேற வேண்டியதுதான் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்பும், பரபரப்பும் கூடுதலாகவே இருக்கும்.

* இந்த 2வது சுற்றில் வென்றால் இந்தியா நவ.13 முதல் அடுத்த ஆண்டு ஜூன் 25 வரை நடைபெறும் 3வது சுற்றில் விளையாடும்.

* ஃபிபா உலக கோப்பை 2026ல் கனடா, மெக்சிகோ, அமெரிக்காவில் நடக்கிறது.

* ஏஎப்சி ஆசிய கோப்பை 2027ல் சவுதி அரேபியாவில் நடைபெறும்.

* கத்தார் – இந்தியா 4 முறை மோதியுள்ளதில் கத்தார் 2-1 என முன்னிலை வகிக்கிறது (ஒரு ஆட்டம் டிரா).

The post உலக கோப்பை தகுதிச் சுற்று கால்பந்து கத்தார்-இந்தியா மோதல் : 3வது சுற்றுக்கு முன்னேற கடைசி வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : World Cup Qualifiers Football Qatar ,India ,Doha ,FIFA World Cup-2026 ,Asian Cup-2027 ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் மின்னணு வாக்கு...