×

5 ஏக்கர் இடம் கையகப்படுத்தி ஓராண்டாகியும் வில்லியனூரில் உழவர்சந்தை அமைக்கும் பணி கிடப்பில் கிடக்கும் அவலம்

*விரைந்து துவங்க விவசாயிகள் கோரிக்கை

புதுச்சேரி : புதுவையில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் மூலம் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு உற்பத்தி செய்த பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. ஆனால், இடைத்தரகர்கள் மட்டும் கொள்ளை லாபம் ஈட்டி வந்தனர். இடைத்தரகர்களின்றி விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களை உழவர் சந்தைகள் மூலம் பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்யும் திட்டத்தை புதுவை அரசு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்தது.

அதன்படி, பழைய பேருந்து நிலையம், அரியாங்குப்பம், லாஸ்பேட்டை, அரும்பார்த்தபுரம் ஆகிய 4 பகுதிகளில் உழவர்சந்தைகள் ஆரம்பிக்கப்பட்டது. இதில் அரும்பார்த்தபுரம் உழவர் சந்தை மட்டும் சில மாதங்களிலேயே மூடுவிழா கண்டது. மற்ற இடங்களில் துவங்கப்பட்ட உழவர் சந்தைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. இதன் மூலம் பொதுமக்கள் குறைந்த விலையில் காய்கறிகளை வாங்கி பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுவை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள உழவர் சந்தையில் 120 கடைகள் உள்ளது. இதை சார்ந்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இங்கு விவசாயிகளுக்காக குடிநீர், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த உழவர் சந்தையின் அலுவலக நேரம் என்பது காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரைதான். ஆனால், கிராமங்களிலிருந்து விவசாயிகள் பேருந்து மூலம் காய்கறிகளை கொண்டு வருவதற்கு சற்று காலதாமதம் ஏற்படுகிறது.

இதனால் தினமும் காலை 6 மணியளவில் உழவர்சந்தை அலுவலகத்தில் தராசு பெற்று விற்பனையை துவங்குகின்றனர். இதன் காரணமாக, மதியம் 1.30 மணி வரை விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சந்தை நகரப்பகுதியில் அமைந்துள்ளதால் வில்லியனூர், திருக்கனூர், மண்ணாடிப்பட்டு, பி.எஸ்.பாளையம், பாகூர், திருபுவனை, மதகடிப்பட்டு உள்ளிட்ட புதுவை பகுதி மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் உள்ள தமிழக பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் வந்து காய்கறிகளை விற்பனை செய்துவிட்டு செல்கின்றனர்.

இதனால், உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகளின் வருகை அதிகரித்து, கடைகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. அதற்கேற்ப சந்தையில் போதுமான இடவசதி இல்லாமல், விவசாயிகள் சாலையை ஆக்கிரமித்து காய்கறி விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இங்கு வரும் பொதுமக்களும் சாலையோரமாக வாகனங்களை நிறுத்திவிட்டு காய்கறிகளை வாங்குகின்றனர். பேருந்துகளும் சாலையோரமாகவே நிறுத்தப்படுகின்றன. இதுபோன்ற காரணங்களால், அவ்வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

அரும்பார்த்தபுரம் பகுதியில் கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி முதல்வர் ரங்கசாமியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தை சில மாதங்களிலேயே மூடப்பட்டது. அங்கு கட்டப்பட்ட கடைகள், அலுவலக அறைகள் உள்ளிட்டவை பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி சேதமடைந்துவிட்டது. அந்த இடத்தை சமூக விரோதிகள் மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அந்த இடத்தில் விவசாயிகளுக்காக குளிர்சாதன வசதியுடன் கூடிய குடோன் அமைத்து, விவசாயிகள் அதிகமாக விளைச்சல் செய்த காய்கறிகளை குடோனில் வீணாகாமல் வைத்து விற்பனைக்கு கொண்டு செல்ல ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிறகு இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

மேலும், விவசாயிகள் அனைவரும் கிராமப்பகுதியில் இருந்து வருவதால் அங்கிருந்து விவசாய பொருட்களை நகரப்பகுதிக்கு கொண்டு வர சிரமப்பட்டு வருகின்றனர். ஆகையால் விவசாயிகள் சிரமமின்றி தங்களது விளைப்பொருட்களை விற்பனை செய்வதற்காக வில்லியனூர் பகுதியில் புதியதாக உழவர் சந்தை அமைக்கப்படும் என கடந்தாண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் வேளாண் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் வில்லியனூர் பகுதியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் சார்பில் உழவர் சந்தை அமைக்க கோப்புகள் தயார் செய்யப்பட்டு கடந்தாண்டு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு அப்போதைய கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்தார்.

அதன்படி வில்லியனூர், கோட்டைமேடு விவேகானந்தா அரசு பள்ளி அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான 5 ஏக்கர் இடத்தை 19 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து ஒருங்கிணைந்த உழவர் சந்தை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்டமாக காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்வதற்கு மட்டும் உழவர் சந்தை ெதாடங்கப்படும் என கூறப்பட்டது. பிறகு அப்பகுதியில் மளிகைகடை, சிறுதானியம் அறைக்கும் இயந்திரம், ஜவுளிக்கடை, ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் சந்தை போன்றவை அமைக்கப்படவுள்ளது. புதுச்சேரி பெரிய மார்க்கெட்டை போன்று வில்லியனூர் பகுதியிலும் பெரிய அளவில் மார்க்கெட் அமைக்கப்படவுள்ளது.

இந்நிலையில் வில்லியனூர் பகுதியில் புதிய உழவர் சந்தை அமைக்க வேளாண்துறை சார்பில் இடம் கையகப்படுத்தப்பட்டு கவர்னர் ஒப்புதல் அளித்து ஒராண்டாகியும் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதியை சிலர் ஆக்கிரமிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே உடனடியாக வில்லியனூர் பகுதியில் புதிய உழவர் சந்தை அமைப்பதற்கான பணிகளை துவங்க கவர்னர், முதல்வர் மற்றும் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

தட்டாஞ்சாவடி வேளாண் அலுவலகத்தை இடமாற்ற முடிவு

புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ள இடத்தில் புதிய சட்டசபை வளாகம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆகையால் அங்குள்ள விற்பனை கூடத்தை விவசாயிகள் பயன்பெரும் வகையில் வில்லியனூரில் அமைக்கப்படும் உழவர் சந்தை பகுதிக்கு இடமாற்றம் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும், உழவர் சந்தை எதிரே ஒருங்கிணைந்த வேளாண் அலுவலகம் கட்டப்பட்டு அங்கு தட்டாஞ்சாவடியில் இயங்கும் புதிய வேளாண் அலுவலகத்தை இடமாற்றம் செய்யவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post 5 ஏக்கர் இடம் கையகப்படுத்தி ஓராண்டாகியும் வில்லியனூரில் உழவர்சந்தை அமைக்கும் பணி கிடப்பில் கிடக்கும் அவலம் appeared first on Dinakaran.

Tags : Villianur ,Puduju ,Villanuur ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி அடுத்த சேதராபட்டு...