×

393 மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மாவட்டம் முழுவதும் 23 ஆயிரம் பேர் ஆப்சென்ட்

*கேள்விகள் எளிமையாக இருந்தன *தேர்வர்கள் மகிழ்ச்சி

மதுரை : மதுரை மாவட்டத்தின் 393 மையங்களில் நேற்று நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கு ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 724 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 84,564 பேர் தேர்வெழுதினர். 23,160 பேர் ஆப்சென்ட் ஆகினர். தேர்வில் கேள்விகள் மிகவும் எளிமையாக இருந்ததால், அதிக மதிப்பெண் கிடைக்கும் என்று இதில் பங்கேற்றோர் மகிழ்வுடன் கூறினர்.

தமிழ்நாட்டில் விஏஓ, வனக்காவலர், பில்கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர், கூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவயியாளர் உள்ளிட்ட 6244 குரூப் 4 நிலை பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புதவற்கான தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜன.30ம் தேதி வெளியிட்டது. இதற்காக மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். இவர்களில் தகுதியானவர்களுக்கு ஆன்லைன் வாயிலாகவே ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டது. அவற்றை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்தனர்.

இதையடுத்து டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. காலை 9.30 மணிக்கு துவங்கி 12.30 மணி வரை 3 மணி நேரம் இத்தேர்வு நடைபெற்றது. குரூப் 4 தேர்வுக்காக மதுரை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் 393 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இவற்றில், ஒரு லட்சத்து 7724 பேர் பங்கேற்க ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டன. ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் துணை ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் நிலை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு அலுவலர்களாக செயல்பட்டனர்.

ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் வருவாய் துறையின் சார்பாக ஒரு ஆய்வு அலுவலர், ஒரு வீடியோகிராபர் வீதம் 393 அலுவலர்களும், 393 வீடியோகிராபர்களும் நியமிக்கப்பட்டு இருந்தனர். வினாத்தாள் மற்றும் விடைத்தாள் உட்பட தேர்வாணையத்தின் பொருட்கள் அனைத்தும் மாவட்ட மற்றும் சார்நிலை கருவூலங்களில் இருந்து தேர்வு மையங்களுக்கு கொண்டு நேற்று காலை ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த பணிகளை துணை வட்டாட்சியர் நிலை அலுவலர் தலைமையில் 88 நகரும் குழுவினர் மேற்கொண்டனர்.தேர்வு மையங்களில் பாதுகாப்பான குடிநீர், தடையில்லா மின்சாரம், சுத்தமான கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. இந்நிலையில் நேற்று காலை நடைபெற்ற தேர்வில் மதுரை மாவட்டத்தில் தாலுகா வாரியாக மையங்களில் தேர்வெழுதியோர் மற்றும் ஆப்சென்ட் விபரம் வருமாறு:

கள்ளிக்குடி தாலுகாவின் 4 பள்ளி மையங்களில் தேர்வு நடைபெற்றது. இதற்கு விண்ணப்பித்த 1,347 பேரில், 1,086 பேர் தேர்வெழுதினர். 261 பேர் ஆப்சென்ட் ஆகினர். மதுரை கிழக்கு தாலுகாவில் 22 பள்ளிகளில் நடந்த தேர்வில் 6,078 பேர் விண்ணப்பித்து இருந்ததில், 1,474 பேர் ஆப்சென்ட் ஆகினர். மதுரை வடக்கில் 91 பள்ளிகளில் 27,867 பேர் எழுத வேண்டிய நிலையில் 6,066 பேரும், மதுரை தெற்கில் 72 பள்ளிகளில் 20, 064 பேர் எழுத வேண்டியதில்,, 4,611 பேரும் ஆப்சென்ட் ஆகினர்.

இதேபோல், மதுரை மேற்கில் 25 பள்ளிகளில் தேர்வு நடைபெற்றது. இதில் 6,397 பேர் பங்கேற்க வேண்டியதில், 1,339 பேர் வரவில்லை. மேலூரில் 32 பள்ளிகளில் 7,928 பேர் தேர்வெழுத வேண்டியதில், 1,511 பேர் ஆப்சென்ட் ஆகினர். பேரையூரின் 21 பள்ளிகளில் தேர்வு நடைபெற்றது. இதில் 5,670 பேர் கலந்து கொள்ள வேண்டியதில் 1,157 பேர் வரவில்லை. திருமங்கலத்தில் 33 பள்ளிகளில் தேர்வில் 8,877 பேர் பங்கேற்க வேண்டும். ஆனால், 1,726 பேரும், திருப்பரங்குன்றத்தில் 30 பள்ளிகளில், 6,117 பேர் எழுதவேண்டிய நிலையில், 1,838 பேரும் ஆப்சென்ட் ஆகினர். உசிலம்பட்டியின் 33 பள்ளிகளில் 8,295 பேர் தேர்வெழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

இதில், 1654 பேரும், வாடிப்பட்டியில் 30 பள்ளிகளில் 7,246 பேர் தேர்வெழுத வேண்டியதில், 1,523 பேரும் ஆப்சென்ட் ஆகினர். இதன்படி மாவட்ட அளவில் தேர்விற்கு ஒரு லட்சத்து 7ஆயிரத்து 724 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் நேற்று, 84,564 பேர் மட்டுமே தேர்வெழுதினர். 23,160 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. இதன்படி மாவட்டத்தில் தேர்வெழுதியோர் சதவீதம் 78.5 சதவீதமாக இருந்தது. தேர்வை ஒட்டி மையங்களில் சிறப்பு பாதுகாப்பு, கண்காணிப்பில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டதுடன், காலை மற்றும் பிற்பகலில் இயங்கும் வகையில் மையங்களுக்கு 30 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

அதிக மதிப்பெண் கிடைக்கும்…

மதுரையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் பங்கேற்ற கோ.புதூரை சேர்ந்த கல்லூரி மாணவி நிவேதா கூறும்போது, ‘‘தேர்வுக்காக எங்கும் தனியாக பயிற்சி வகுப்புகளுக்கு செல்லவில்லை. அதற்கு மாறாக, 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான அனைத்து பாடப்புத்தகங்களையும் விடுமுறை நாட்களில் அரசு ஏற்பாடு செய்துள்ள படிப்பகத்தில் இருந்து வாசித்தேன். கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பொது அறிவு தொடர்பான புத்தகங்களை படித்தேன். இந்த தேர்வில் தமிழ், கணிதம் உள்ளிட்ட அனைத்து வினாக்களும் மிகவும் எளிமையாக இருந்தன. இதனால் நிச்சயம் அதிக மதிப்பெண் கிடைக்கும் என நம்புகிறேன்’’ என்றார்.

The post 393 மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மாவட்டம் முழுவதும் 23 ஆயிரம் பேர் ஆப்சென்ட் appeared first on Dinakaran.

Tags : TNPSC Group 4 ,Madurai ,Dinakaran ,
× RELATED 6,244 காலி பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி...