×

ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் பீட்ரூட் அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரம்

ஊட்டி : ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் பீட்ரூட் அறுவடை செய்யும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் மலை காய்கறிகளான கேரட், பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு, பீட்ரூட், முட்டைகோஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்படுகிறது. இங்கு நிலவும் காலநிலைகளுக்கு ஏற்ப விளையக்கூடிய காய்கறிகளை விவசாயிகள் விளைவித்து வந்தனர். மலைக்காய்கறி விவசாயம் பெரும்பாலும் ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவு பயிரிடப்படுகிறது.

நீலகிரியில் விளைவிக்கப்படும் காய்கறிகள் ஊட்டி மார்க்கெட் அல்லது மேட்டுபாளையம் மார்க்கெட்டுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களான கோவை, ஈரோடு, சென்னை போன்ற இடங்களுக்கும் கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இது மட்டுமின்றி நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கும் விளைவிக்கப்படும் இடத்திலேயே பிரஷ்ஷாக கிடைப்பதால் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். நீலகிரியில் பீட்ரூட் 405 ெஹக்டர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது.

இதனிடையே ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான நஞ்சநாடு, கல்லக்கொரை ஆடா, தேனாடுகம்பை உள்ளிட்ட பகுதிகளில் பீட்ரூட் அதிகளவு பயிரிடப்பட்டன. தற்போது ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் மண்ணிற்கு அடியில் விளையும் பயிரான பீட்ரூட் காய்கறியில் அழுகல் பாதிப்பு ஏற்படாத வண்ணம் அவற்றை விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். இதேபோல் கேரட், உருளைகிழங்கு உள்ளிட்டவற்றையும் அறுவடை செய்து வருகின்றனர்.

The post ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் பீட்ரூட் அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Nilgiris district ,
× RELATED பூங்கா சாலையோர கால்வாயில்...