திருவாரூர், ஜூன் 10: திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்தவர்கள் பத்மஸ்ரீ விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் பல்வேறு துறைகளில் தலைச்சிறந்தவர்களாகவும், தனிநபராக சாதனை புரிந்தவர்களாகவும் இருப்பவர்களுக்கு அரசு மூலம் பத்ம விருது வழங்கப்பட்டு வருகிறது.
அதாவது கலை, இலக்கியம், இசை, பெயிண்டிங், சிற்பத்திறன், போட்டோகிராஃபர், சினிமா ஆகிய துறையில் தேசிய அளவில் தன் திறமைகளை நிருபித்தவர்களாக இருத்தல் வேண்டும். மேலும் பொதுநலத்தொண்டு, தன்னார்வ தொண்டு, சாதிசமய தொண்டாற்றியவர்கள், பொதுமக்களுக்கான சேவை, சட்டம், பொதுவாழ்க்கை, அரசியல் ஆகியவற்றில் சேவை புரிந்தவர்கள், அறிவியல், பொறியியல், விண்வெளி ஆராய்ச்சி, நியூக்கிளியர் அறிவியல் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்கள்,
நாட்டு வணிகம் மற்றும் தொழிற்சாலை, வங்கி, பொருளாதாரம், சுற்றுலா ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்கள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி, ஆயுர்வேதா, ஹோமியோபதி, சித்தா, அலோபதி, இயற்கை வைத்தியம் ஆகியவற்றில் சாதனை புரிந்தவர்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியவர்கள், கல்வி, பத்திரிக்கை, நாவல், கவிதை, பாடல், கல்விக்கான முன்னேற்ற சேவை ஆகியவற்றில் சாதனை படைத்தவதர்கள், அரசாங்கத்தில் மேனேஜ்மென்ட், நிர்வாகம் மற்றும் அரசாங்கம் மேம்பாடு அடையச்செய்தவர்கள்,
விளையாட்டுத்துறையில் தேசிய, பன்னாட்டு அளவில் பதக்கம் பெற்றவர்கள், மலையேற்றம், விளையாட்டுத்துறையை மேம்படுத்தியவர்கள், விளையாட்டினை ஊக்கப்படுத்தியவர்கள், பன்னாட்டு அளவில் போட்டிகளை சிறப்பாக நடத்தியவர்கள், பன்னாட்டு அளவில் யோகாவில் பதக்கம் பெற்றவர்கள், இந்திய கலாச்சாரம், மனிதஉரிமை நிலைநாட்டல், வனப்பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் காப்பாற்றுதல் போன்ற சாதனைகளை நிகழ்த்தியவர்களுக்கு பத்மவிருதுகள் அதாவது பத்மஸ்ரீ,
பத்மவியூசன், பத்மபூசன் ஆகிய விருதுகள் இந்திய அரசால் வழங்கப்படவுள்ளது. எனவே,திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்தவர்கள் இவ்விருதிற்கான விண்ணப்பப்படிவம் மற்றும் இதர விபரங்களை https://awards.gov.in என்ற இணையதள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பபடிவங்களை அதே இணையதள முகவரியலேயே வரும் 30ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேற்படி விருது பெறுவதற்கு திருவாரூர் மாவட்டத்திலுள்ள சாதனை புரிந்தவர்கள் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும். இவ்வாறு கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
The post திருவாரூர் மாவட்டத்தில் பத்மஸ்ரீ விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு appeared first on Dinakaran.