சிவகங்கை, ஜூன் 10: சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சி சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மருது பாண்டியர் பூங்காவில், முதலாமாண்டு கோடை விழாவை தொடங்கி வைத்து கலெக்டர் ஆஷாஅஜித் பேசியதாவது: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அரசுத் துறைகளின் சார்பில் பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், சிவகங்கை நகராட்சி சார்பில் மருது பாண்டியர் பூங்கா, ரூ.20லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டுள்ளது.
இக்கோடை விழா முதன்முறையாக இவ்வாண்டு முதல் கொண்டாடுவதற்கு திட்டமிடப்பட்டு, அதற்கென பல்வேறு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோடை விழா ஜூன் 17வரை நடைபெற உள்ளது. இப்பூங்காவில் சிறுவர்களை கவரும் வகையில், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கண்கவர் வர்ணங்கள் பூசப்பட்டுள்ள வன விலங்குகளின் உருவச்சிலைகள், பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் நடைபாதைகள் மற்றும் புற்களால் வடிவமைக்கப்பட்ட தரைத்தளங்கள், நீருற்று போன்ற பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சார்ந்த பொதுமக்கள் இக்கோடை விழாவில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு பேசினார். விழாவில் தேசிய அளவில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற 6 குத்துச்சண்டை வீரர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், சிவகங்கை நகர் மன்றத்தலைவர் துரைஆனந்த், நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணாராம், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post சிவகங்கை பூங்காவில் கோடை விழா துவக்கம் appeared first on Dinakaran.