×

போக்குவரத்து கழகங்களுக்கு உதிரிபாகங்களை வாங்க அரசு போதிய நிதி ஒதுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்து உதிரிபாகங்களை வாங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: தஞ்சாவூரில் ஒரே நாளில் அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான இரு நகரப் பேருந்துகள் அச்சு முறிந்து நடுவழியில் நின்றுள்ளன. ஓட்டுனர்கள் சிறப்பாக செயல்பட்டதால் விபத்துகள் தவிர்க்கப்பட்டுள்ளன.

அந்த அரசுப் பேருந்துகளை நம்பி பயணம் செய்த மக்கள், வேறு ஊர்திகளில் ஏறி தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை அடைய வேண்டிய அவல நிலைக்கு ஆளாகியுள்ளனர். அரசுப் பேருந்துகளின் பராமரிப்பு நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதும், அதை சரி செய்ய தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததும் கண்டிக்கத்தக்கது. அரசுப் பேருந்துகளின் சேவை ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்தவை.

மாநிலத்தின் பொருளாதாரமும், ஏழை எளிய மக்களின் வாழ்க்கை நிலையும் முன்னேற வேண்டும் என்றால் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் வலிமையாக இருக்க வேண்டியதும், அனைத்துக் கிராமங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட வேண்டியதும் கட்டாயம் ஆகும். இதை உணர்ந்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். அதற்காகவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

The post போக்குவரத்து கழகங்களுக்கு உதிரிபாகங்களை வாங்க அரசு போதிய நிதி ஒதுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Govt ,Ramadoss ,CHENNAI ,BAMA ,Ramadas ,Thanjavur ,State Transport Corporation ,
× RELATED ஓட்டுநர் உரிமம் பெற மருத்துவச்...