×

கோடை விடுமுறைக்கு பிறகு தமிழ்நாட்டில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கு விலையில்லா புத்தகம், சீருடைகள் வழங்க ஏற்பாடு

சென்னை: கோடை விடுமுறைக்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. பள்ளிகள் திறக்கப்படும் இன்றே, மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகம், சீருடை உள்ளிட்ட அனைத்து விலையில்லா நலத்திட்டப் பொருள்களும் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான விரிவான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை முன்னெடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தின்கீழ் 37 ஆயிரத்து 576 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதன்படி பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் மேல்நிலைப் பள்ளிகள் 3156, உயர்நிலைப் பள்ளிகள் 3094, தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் தொடக்கப் பள்ளிகள் 24350, நடுநிலைப் பள்ளிகள் 6976 பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் 5000, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 3000 என இயங்கி வரும் நிலையில், கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்த ஆண்டு பொதுத்தேர்வுக்கு பிறகு மே மாதம் 1ம் தேதியில் இருந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து வகைப்பள்ளிகளும் இன்று (10ம் தேதி) திறக்கப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு முன்னதாக பள்ளி வளாகங்கள், வகுப்பறைகளை தூய்மை செய்தல், கழிப்பிட வசதிகள், குடிநீர் வசதிகள் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தலைமையில் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டன.

இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் உத்தரவின் பேரில் அனைத்து விலையில்லாப் பொருள்களும் வழங்க தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதனால் இன்று பள்ளிகள் திறந்ததும், பள்ளிக்கு வரும் அனைத்து மாணவ மாணவியருக்கும் மேற்கண்ட பொருள்கள் அனைத்தும் வழங்கப்பட உள்ளன. இத்துடன், புதிய மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கான பணிகளும் இன்று தொடங்க உள்ளன.

மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல்
* முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், இன்று பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியருக்கு சர்க்கரை பொங்கல் வழங்க சமூக நலத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

*மாணவ, மாணவியரின் பெற்றோரின் செல்போன் எண்கள் இதுவரை 1 கோடி பெறப்பட்டு, பள்ளிக்கல்வித்துறையின் கணினியில் (EMIS) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இன்று முதல் அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்கள், வகுப்பறையில் மாணவர்களின் கற்கும் திறன், வருகைப்பதிவேடு, பள்ளிக்கு வரும் நேரம், ஆசிரியர்களிடம் மாணவர்கள் காட்டும் மரியாதை, தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள், உள்ளிட்ட விவரங்கள் மேற்கண்ட பெற்றோரின் செல்போன் எண்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அனுப்பி வைக்கும்.

* இன்று பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு தேவையான திறன் மேம்பாட்டு பயிற்சிகள், உயர்கல்விக்கான வழிகாட்டுதல்கள் அளிக்கவும் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

* 6 கோடியே 50 லட்சம் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கவும் பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

The post கோடை விடுமுறைக்கு பிறகு தமிழ்நாட்டில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கு விலையில்லா புத்தகம், சீருடைகள் வழங்க ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...