×
Saravana Stores

ஆரம்பிச்சுட்டாங்கய்யா… ஆரம்பிச்சுட்டாங்க; ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி எம்எல்ஏக்களை இழுக்க பேச்சு: ஆந்திராவில் `ஆபரேஷன் தாமரை’

திருமலை: மத்தியில் ஆட்சியை நிலைநிறுத்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பிக்களை இழுக்க பாஜக ஆபரேஷன் தாமரையை தொடங்கியுள்ளது. இதனால் ஆட்சியை இழந்துள்ள ஜெகன்மோகன் மேலும் அதிர்ச்சியடைந்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் 240 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. ஆனால் ஆட்சியமைக்க மொத்தம் 272 சீட்கள் தேவை. இந்நிலையில் தனது கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12) மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்களின் ஆதரவுடன் இன்றிரவு 3வது முறையாக மோடி, பிரதமர் பதவியை ஏற்கிறார். பெரும்பான்மை பலம் இல்லாமல் மோடி பதவியேற்க உள்ள நிலையில் அவரது ஆட்சி 5 ஆண்டுகளுக்கு நிலைக்காது என `இந்தியா’ கூட்டணி கட்சிகள் கூறிவருகின்றன.

அதேவேளையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவில் ஆட்சியமைக்கும் பாஜகவும் இதனை உணர்ந்துள்ளது. அதற்கேற்ப பாஜக, தனது பலத்தை அதிகரிப்பதற்கான திரைமறைவு வேலைகளை தற்போது தொடங்கிவிட்டது. அதாவது பலம் இழந்த மாநில எதிர்க்கட்சிகளில் வெற்றிபெற்றுள்ள எம்பிக்களை தங்கள் வசம் இழுக்க `ஆபரேஷன் தாமரை’ திட்டத்தை பாஜக தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக ஆந்திராவில் எதிர்க்கட்சி அந்தஸ்துகூட பெறாமல் ஆட்சியை இழந்துள்ள ஜெகன்மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரசில் வெற்றிபெற்ற 4 எம்பிக்களை பாஜகவுக்கு இழுக்க திட்டமிட்டுள்ளார்களாம். அதற்கேற்ப 4 எம்பிக்களுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக தெரிகிறது.

அதேபோன்று ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிசுக்கு வெறும் 11 எம்எல்ஏக்கள் மட்டுமே கிடைத்துள்ளனர். அதில் ஜெகனை தணித்துவிட சில எம்எல்ஏக்கள் முடிவு செய்து அவர்களும் பாஜகவிடம் ரகசிய பேச்சு நடத்துவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஆட்சி இழந்து எதிர்க்கட்சி அந்தஸ்துகூட கிடைக்காத நிலையில் பாஜகவின் இதுபோன்ற செயலால் ஜெகன்மோகன் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். அவரது கட்சி எம்பி, எம்எல்ஏக்களோ அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்தியிலும், மாநிலத்திலும் ஆள்பவர்களால் தங்களுக்கும், தங்களது குடும்பத்தினர் மற்றும் தொழில்களுக்கும் இடையூறுகள் ஏற்படாமல் இருக்கவே வேறுவழியின்றி பாஜகவுக்கு அணி தாவ உடன்பட்டு பேசி வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே தமிழகத்தில் சிவகங்கை மக்களவை தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில், `பாஜக தனது ஆட்சியை நிலைநிறுத்திக்கொள்ள ஆபரேஷன் தாமரையை தொடங்கிவிட்டது. ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து தொடங்குகிறது’ என தெரிவித்துள்ளார். இந்த பதிவு ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜ கடந்த ஆட்சியின்போது, இதேபோல் எதிர்க்கட்சி எம்பி, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைப்பது எதிர்க்கட்சிகளை இல்லாமல் செய்வது போன்ற வேலைகளை தொடர்ந்து செய்து வந்தது.

இதற்காக அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய ஏஜென்சிகளைப் பயன்படுத்தி வந்தது. இந்த தேர்தலில் ஆட்சியமைக்க தனிப்பெரும்பான்மை கூட கிடைக்காத நிலையில், பழைய தவறையே மீண்டும் பாஜ செய்யத் தொடங்கியிருப்பது அதன் உண்மை முகத்தை காட்டுகிறது. மோடிக்கு ஆதரவு தரும் சந்திரபாபு நாயுடு இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏற்கனவே தெலுங்கு தேசம் ராஜ்ய சபா எம்பிக்களை கபளீகரம் செய்த கட்சிதான் பாஜ என்பதை சந்திரபாபு நாயுடு மறக்கக்கூடாது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

The post ஆரம்பிச்சுட்டாங்கய்யா… ஆரம்பிச்சுட்டாங்க; ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி எம்எல்ஏக்களை இழுக்க பேச்சு: ஆந்திராவில் `ஆபரேஷன் தாமரை’ appeared first on Dinakaran.

Tags : YSR Congress ,Pradesh ,Tirumala ,BJP ,Operation Tamarai ,Jaganmohan ,
× RELATED ஆதரவற்றோருக்கான இடத்தை அபகரிக்க...