- சோனியா
- காந்தி நாடாளுமன்ற குழு
- ராகுல்
- மக்களவை
- காங்கிரஸ்
- பணிக்குழு
- புது தில்லி
- ராகுல் காந்தி
- காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு
- சோனியா காந்தி பாராளும
- குழு
- காங்கிரஸ் செயல்பாட்டுக் குழு
- தின மலர்
புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டுமென காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் ஒருமனதாக வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து விரைவில் தனது முடிவை தெரிவிப்பதாக ராகுல் கூறி உள்ளார். காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வென்று தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. அதே சமயம் 99 இடங்களை பிடித்து, 10 ஆண்டுகளுக்குப் பிறகு மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் பெற்றுள்ளது.
கடந்த 2019 தேர்தலில் 52 இடங்களிலும், 2014ல் 44 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வென்றதால் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியவில்லை. இதற்கு நாடாளுமன்றத்தில் மொத்த இடங்களில் 10 சதவீத உறுப்பினர்கள் தேவை. தற்போது காங்கிரஸ் 99 எம்பிக்களை பெற்றதோடு, இந்தியா கூட்டணி கட்சிகளுடன் மீண்டும் வலுவுடன் நாடாளுமன்றத்தில் நுழைய உள்ளது. இந்நிலையில், காங்கிரசில் உயர்மட்ட முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்ட காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காரிய கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்றனர். தொடக்க உரையாற்றிய கார்கே, மக்களவை தேர்தலில் கட்சியின் சிறப்பான செயல்பாட்டிற்காக உழைத்த தலைவர்கள், நிர்வாகிகள், கட்சி தொண்டர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.
மேலும், விவசாயிகள், பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான அமைப்புகள், சமூக அமைப்புகள், என்ஜிஓக்கள், வர்த்தக அமைப்புகள், வழக்கறிஞர்கள், சுயாதீன மீடியாக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து, மக்களவை தேர்தலில் கட்சியின் சிறப்பான செயல்பாட்டிற்காக தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி ஆகியோரை பாராட்டியும், குறிப்பாக காங்கிரசின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த ராகுலின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மக்களின் தீர்ப்பு பாஜவின் அரசியல் இழப்பு மட்டுமல்ல, மோடியின் தனிப்பட்ட தார்மீக தோல்வி என 2வது தீர்மானம் நிறைவேற்றபட்டது. அப்போது கூட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராகுல் ஏற்க வேண்டுமென மூத்த தலைவர்கள் ஒருமனதாக வலியுறுத்தினர்.
இது குறித்து, கூட்டத்திற்குப் பின் பேட்டி அளித்த கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், ‘‘கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். காங்கிரசின் மறுமலர்ச்சி தொடங்கி உள்ளது. இதற்கு ராகுலின் இந்திய ஒற்றுமை நடைபயணம் முக்கிய காரணமாகும். இதற்காக காரிய கமிட்டி ராகுலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. மேலும், மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் பொறுப்பேற்க வேண்டுமென கமிட்டி உறுப்பினர்கள் ஒருமனதாக வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து விரைவில் முடிவெடுப்பதாக ராகுல் கூறி உள்ளார்’’ என்றார்.
காரிய கமிட்டி கூட்டத்தை தொடர்ந்து, மக்களவைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் எம்பிக்கள் மற்றும் மாநிலங்களவை காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. இதில், நாடாளுமன்ற கட்சித் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இம்முறை சோனியா காந்தி, மாநிலங்களவை எம்பியாக தேர்வாகி உள்ளார். அவரது பெயரை கட்சித் தலைவர் கார்கே முன்மொழிய, மூத்த தலைவர்கள் கவுரவ் கோகாய், தாரிக் அன்வர், கே.சுதாகரன் ஆகியோர் வழிமொழிந்தனர்.
* இந்தியா கூட்டணி தொடர வேண்டும்
மக்களவை தேர்தலில் ஒன்றுபட்டு சிறப்பான பங்களிப்பை தந்த இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் காரிய கமிட்டி பாராட்டு தெரிவித்தது. இது குறித்து பேசிய மல்லிகார்ஜூன கார்கே, ‘‘மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் அவரவர் மாநிலங்களில் தனக்கான பாத்திரத்தை சிறப்பாக செய்து, சிறந்த பங்களிப்பை வழங்கின. இந்தியா கூட்டணி எப்போதும் தொடர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். நாடாளுமன்றத்திலும் வெளியிலும் நாம் ஒருங்கிணைந்து, கூட்டாக செயல்பட வேண்டும். தேர்தல் பிரசாரத்தில் நாம் எழுப்பிய பிரச்னைகள் மக்களை பெரிதும் பாதித்த பிரச்னைகள். அவற்றை நாடாளுமன்றத்திலும், வெளியிலும் நாம் தொடர்ந்து எழுப்ப வேண்டும். நாம் ஒழுங்குடன், ஒற்றுமையாக இருக்க வேண்டும். மக்கள் நம்மீது நம்பிக்கை வைத்துள்ளனர், அதை நாம் கட்டியெழுப்ப வேண்டும். மக்கள் தீர்ப்பை உண்மையான பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், காங்கிரஸ் கட்சியின் பணி தொடர்கிறது. 24 மணி நேரமும், 365 நாட்களும் மக்கள் மத்தியில் உழைத்து அவர்களின் பிரச்னைகளை தீர்க்க பாடுபட வேண்டும்’’ என்றார்.
* மக்களவையில் இதுவரை 11 பேர் எதிர்க்கட்சி தலைவர் பதவி வகித்துள்ளனர்.
* ராஜிவ்காந்தி 1989 டிசம்பர் 18 முதல் 1990 டிசம்பர் 23 வரை எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்.
* சோனியாகாந்தி 1999 அக்டோபர் 31 முதல் 2004 பிப்ரவரி 6 வரை எதிர்க்கட்சி தலைவர் பதவி வகித்தார்.
* இந்த முறை ராகுல்காந்தி எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்றால் தாய், தந்தையை தொடர்ந்து மகனும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை வகித்த பெருமை கிடைக்கும்.
The post சோனியா காந்தி நாடாளுமன்ற குழு தலைவர் மக்களவை எதிர்க்கட்சி தலைவராகிறார் ராகுல்: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.