×

நாளை 3வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்பு; டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு: ஒன்றிய அமைச்சர்கள், சபாநாயகர் பதவிக்கு கடும் போட்டி

புதுடெல்லி: நாளை 3வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில், வரும் 15ம் தேதி நாடாளுமன்ற 18வது கூட்டத் தொடர் தொடங்குகிறது. ஒன்றிய அமைச்சர்கள், சபாநாயகர் தேர்வு குறித்த அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 543 இடங்களில் பாஜக 240 இடங்களைக் கைப்பற்றியது. பெரும்பான்மை பலத்துக்கான 272 இடங்களை கைப்பற்றாததால், பாஜக தனி மெஜாரிட்டி பெறவில்லை. ஆனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையை எட்டியுள்ளது. அதனால் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு அமையவுள்ளது. ஒன்றிய அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் கடந்த 5ம் தேதி நாடாளுமன்றத்தின் 17வது மக்களவையை ஜனாதிபதி திரவுபதி முர்மு கலைத்தார். பாஜக கூட்டணி சார்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் கூட்டம் பழைய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவர் பதவிக்கு மோடியின் பெயரை முன்மொழிந்தார். தொடர்ந்து ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி உள்ளிட்டோர் இதை வழிமொழிந்தனர். நிறைவாக தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக மோடி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த பிரதமர் மோடி, எம்பிக்களின் ஆதரவு கடிதத்தை அளித்து, ஒன்றியத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டு, ஆட்சி அமைக்க அவருக்கு அழைப்பு விடுத்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நாளை (ஜூன் 9) இரவு 7.15 மணிக்குநடைபெறும் விழாவில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்கிறது. 3வது முறை பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார். அவருடன் முக்கிய அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். அமைச்சர்களின் பட்டியலை குடியரசுத் தலைவரிடம் வழங்கியுள்ளதாக மோடி தெரிவித்தார். அந்த அமைச்சரவை பட்டியலில் யார் யார் பெயர் இடம் பெற்றுள்ளது என்பது குறித்த செய்திகள் தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி மக்களவை சபாநாயகர் தேர்வு குறித்தும் முக்கிய விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது. நாளை மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர், மோடி முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே நாடாளுமன்ற மக்களவை செயலக வட்டாரங்கள் கூறுகையில், ‘நாடாளுமன்ற மக்களவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 15ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார்.

எம்பிக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதவியேற்பு நிகழ்வுகள் 2 நாட்கள் நடைபெறும். அதன்பிறகு மக்களவைக்கு புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார். நாடாளுமன்ற கூட்டத் தொடர் முறைப்படி தொடங்கும் வகையில், அடுத்த நாள் லோக்சபா மற்றும் ராஜ்யசபா கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுவார். கூட்டத்தொடர் நடைபெறும் தேதிகள் குறித்து புதிய ஒன்றிய அமைச்சரவை இறுதி செய்யும். கூட்டத்தொடரின் போது, ​​பிரதமர் மோடி தனது அமைச்சர்களை இரு அவைகளிலும் அறிமுகப்படுத்துவார். கூட்டத்தொடர் வரும் 22ம் தேதி முடிவடையும் என தெரிகிறது. நாளை ராஷ்டிரபதி பவனில் பதவியேற்பு விழா முடிந்தவுடன், உடனடியாக ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிகிறது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பிரதமர் பதவியேற்பு விழா நாளை தலைநகர் டெல்லியில் நடப்பதால், பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

5 கம்பெனி நாடாளுமன்ற பாதுகாப்புப் படையினர், என்எஸ்ஜி கமாண்டோக்கள், ட்ரோன்கள், ஸ்னைப்பர்கள் என பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வங்கதேசம், இலங்கை, மாலத்தீவு, பூட்டான், நேபாள், மொரீஷியஸ், செசல்ஸ் தீவுகள் தலைவர்களுக்கு பிரதமர் பதவியேற்பு விழாவுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஓட்டல்கள் லீலா, தாஜ், ஐடிசி மவுரியா, க்ளாரிட்ஜெஸ், ஓபராய் ஆகியன பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. குடியரசுத் தலைவர் மாளிகையில் டெல்லி காவல்துறையின் சிறப்பு ஆயுதங்கள், உத்திகள் படைப் பிரிவான ஸ்வாட் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 2500 காவலர்கள், 5 கம்பெனி நாடாளுமன்ற பாதுகாப்புக் குழு, டெல்லி ஆயுதப்படைக் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். டெல்லியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டெல்லி எல்லையை ஒட்டிய பகுதிகளில் தீவிர கண்காணிப்புக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

The post நாளை 3வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்பு; டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு: ஒன்றிய அமைச்சர்கள், சபாநாயகர் பதவிக்கு கடும் போட்டி appeared first on Dinakaran.

Tags : Modi ,Delhi ,New Delhi ,Parliament ,Lok Sabha ,Speaker ,Dinakaran ,
× RELATED இந்தோனேஷிய அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை