×

புதுச்சேரி கூட்டணி அரசில் விரிசல் அமைச்சரவையில் இருந்து வெளியேற பாஜ முடிவு? தேர்தல் தோல்வி, என்.ஆர்.காங்கிரஸ் மீது அதிருப்தியால் விரக்தி

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கூட்டணி ஆட்சி அமைச்சரவையில் பாஜவுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது நடந்து முடிந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக அமைச்சர் நமச்சிவாயத்தை நீண்ட போராட்டத்துக்கு பின் என்.ஆர்.காங்கிரஸ், பாஜ அறிவித்தது. ஏற்கனவே முதல்வருடன் சேர்ந்து முடிவு எடுக்காமல் ஆளுநர் மூலம் ஒன்றிய அரசு ஆட்சி நடத்தி வந்தது, முதல்வர் ரங்கசாமியை அவமதித்தது, தொகுதியில் பல்வேறு திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டது என பல்வேறு விவகாரங்களில் இருகட்சிகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.

இந்த சூழலில், நாடாளுமன்ற தேர்தலில் பாஜ சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டது, என்.ஆர்.காங்கிரஸ் மூத்த தலைவர்கள், நிர்வாகிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், வாக்கு சேகரிப்பின் போது நமச்சிவாயத்துக்கு ஆதரவாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் ஓட்டு கேட்கவில்லை. அதே நேரத்தில் சிட்டிங் எம்பியான காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு மக்கள் ஆதரவு இருந்ததால் வெற்றி பெற்றார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு இடம் கூட பாஜவுக்கு கிடைக்காததால், இரு மாநில தலைவர்களை டெல்லிக்கு அழைத்து மேலிடம் விசாரித்து வருகிறது.

அதன்படி, டெல்லி மேலிடம் அழைப்பின் பேரில் பாஜ வேட்பாளரான நமச்சிவாயம், பாஜ தலைவர் செல்வ கணபதி நேற்று முன்தினம் டெல்லி விரைந்தனர். 2வது நாளாக அங்கேயே முகாமிட்டுள்ள இருவரும், கட்சியின் முன்னணி தலைவர்கள் சிலரை சந்தித்து பேசி வருவதாக தகவல் வெளியாகி வருகின்றன. இந்த சந்திப்பின் போது புதுச்சேரி அரசியல் கள நிலவரம், கூட்டணியில் நிர்வாகிகள் இடையே ஏற்பட்டுள்ள விரிசல் உள்ளிட்டவை தொடர்பாகவும் ஆலோசித்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் புதுச்சேரி அமைச்சரவை மாற்றம், மத்திய அமைச்சரவையில் புதுவைக்கான முக்கியத்துவம் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் என்ஆர்.காங்கிரஸ் அமைச்சர்கள் 3 பேரும், பாஜக அமைச்சர்கள் 2 பேரும் உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியை நம்பி களமிறங்கிய பாஜ தோல்வியை சந்தித்துள்ள நிலையில் அமைச்சரவையில் இருந்து வெளியேறுவது தொடர்பாகவும், ரங்கசாமி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது தொடர்பாகவும் அக்கட்சியின் தலைமை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

The post புதுச்சேரி கூட்டணி அரசில் விரிசல் அமைச்சரவையில் இருந்து வெளியேற பாஜ முடிவு? தேர்தல் தோல்வி, என்.ஆர்.காங்கிரஸ் மீது அதிருப்தியால் விரக்தி appeared first on Dinakaran.

Tags : Puducherry ,government ,BJP ,NR Congress ,Baj coalition government ,Chief Minister ,Rangasamy ,Minister ,Namachivayam ,National Democratic Alliance ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி அரசுக்கு எதிராக பாஜ...