×

தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக நாளை பதவி ஏற்கிறார் மோடி: உலக தலைவர்கள் வருகை

புதுடெல்லி: தொடர்ந்து 3வது முறையாக நாட்டின் பிரதமராக மோடி நாளை இரவு 7.15 மணிக்கு பதவி ஏற்க உள்ளார். அவரை புதிய பிரதமராக நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டு உள்ளார். மோடி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள உலக தலைவர்கள் வருகிறார்கள். 18வது மக்களவை தேர்தல் ஏப்.19 தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டமாக நடந்தது. ஜூன் 4ம் தேதி நடந்த ஓட்டு எண்ணிக்கையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிகபட்சமாக பா.ஜ 240, காங்கிரஸ் 99 இடங்களை பிடித்தன.

ஆனால் பா.ஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மைய அரங்கில் நேற்று நடந்தது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் அனைத்து தலைவர்களும், புதிதாக தேர்வு செய்யப்பட்ட கூட்டணிகட்சி எம்பிக்களும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பா.ஜ மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் மற்றும் மக்களவைத் தலைவராக மோடியின் பெயரை ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்மொழிந்தார்.

தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா வழிமொழிந்தார். இதன்பின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவராக மோடியை பிரதமராக தேர்வு செய்வதற்கு தங்கள் ஆதரவினை தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழுத்தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அனைவரது ஆதரவையும் இருகரம் கூப்பி மோடி ஏற்றுக்கொண்டார். பின்னர் மோடி பேசியதாவது:

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக அனைவரும் ஒருமனதாக என்னை தேர்வு செய்திருக்கிறீர்கள். நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். நீங்கள் அனைவரும் எனக்கு ஒரு புதிய பொறுப்பை வழங்கியுள்ளீர்கள். நான் உங்களுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.2019ல் இந்த சபையில் நீங்கள் அனைவரும் என்னை தலைவராக தேர்ந்தெடுத்தீர்கள். இன்று மீண்டும் இந்த பொறுப்பை எனக்கு வழங்குகிறீர்கள் என்றால், இந்த உறவு வலுவானது என்று அர்த்தம்.

நம்பிக்கையின் வலுவான அடித்தளத்தில் அமைந்துள்ள இந்த உறவுதான் மிகப் பெரிய சொத்து. அரங்கில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.பி.க்களுக்கும், மாநிலங்களவை எம்.பி.க்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிக்காக இரவு பகலாக உழைத்த லட்சக்கணக்கான தொண்டர்களை இன்று இந்த மைய மண்டபத்தில் இருந்து வணங்குகிறேன்.

இந்தியாவின் மாபெரும் ஜனநாயகத்தின் வலிமை காரணமாக தேசிய ஜனநாயக கூட்டணி இன்று 22 மாநிலங்களில் ஆட்சி அமைக்கவும், பணியாற்றவும் மக்கள் வாய்ப்பளித்துள்ளனர். நம் நாட்டில் 10 மாநிலங்களில் பழங்குடியின சகோதரர்கள் அதிகளவில் உள்ளனர். இந்த 10 மாநிலங்களில் 7ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள கோவா மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

அரசை நடத்துவதற்கு மக்கள் கொடுத்த பெரும்பான்மையைக் கொண்டு ஒருமித்த கருத்துக்கு பாடுபடுவோம் என்றும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதில் எந்த ஒரு வாய்ப்பையும் விட்டுவிட மாட்டோம் என்றும் நாட்டு மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். தேசிய ஜனநாயக கூட்டணி சுமார் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இது சாதாரண விஷயம் அல்ல. இன்றைய சூழ்நிலையில், நாடு தேசிய ஜனநாயக கூட்டணியை மட்டுமே நம்புகிறது என்பதை 2024 தேர்தல் மீண்டும் வலுப்படுத்தி உள்ளது.

நாங்கள் பணியாற்றிய 10 வருடங்கள் வெறும் ட்ரெய்லர் என்று நான் முன்பே கூறியிருந்தேன். நாங்கள் வெளியிட்டது வெறும் தேர்தல் அறிக்கை அல்ல, அது என்னுடைய அர்ப்பணிப்பு. ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு அதிகாரமளிப்பதே எங்கள் முன்னுரிமை. புதிய இந்தியா, வளர்ந்த இந்தியா, லட்சிய இந்தியா. இதுவே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு என்பதை நான் அறிவேன். தென்னிந்தியாவில், புதிய அரசியலுக்கான அடித்தளத்தை தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்படுத்தியுள்ளது.

கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் சமீபத்தில்தான் புதிய அரசுகள் அமைந்தன. ஆனால், அந்த மாநிலங்களில் மக்களின் நம்பிக்கை நொடிகளில் உடைந்துவிட்டது. தமிழ்நாட்டில் எங்களால் ஓர் இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் போயிருக்கலாம். ஆனால் அங்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதால், அது ஒரு தெளிவான செய்தியை அளிக்கிறது. கேரளாவில் நூற்றுக்கணக்கான நமது தொண்டர்கள் தியாகம் செய்ததன் விளைவாக, முதல் முறையாக அம்மாநிலத்தில் இருந்து ஒரு பிரதிநிதி வந்துள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பெயர் மாற்றப்பட்டது. மாறிய பிறகும் நாடு அவர்களை மன்னிக்கவில்லை; நாடு அவர்களை நிராகரித்துவிட்டது. நாட்டு மக்கள் இவர்களை எதிர்க்கட்சியில் அமர வைத்துள்ளனர் என்று சொல்லலாம். இவ்வாறு மோடி பேசினார்.

இந்த கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார், தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர் குமாரசாமி, பவன் கல்யாண், பீகார் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சி, ஆர்எல்டி தலைவர் ஜெயந்த்சிங்கா, சிராக் பஸ்வான், அனுப்பிரியா பட்டேல், ஓபிஎஸ், ஜி.கே.வாசன், டிடிவி தினகரன், ஜான் பாண்டியன், ரவீந்திரநாத் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டம் முடிந்த பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் மற்றும் எம்பிக்களின் ஆதரவு கடிதத்துடன் ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேற்று மாலை மோடி சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு, நாட்டின் புதிய பிரதமராக மோடியை நியமித்து உத்தரவிட்டார்.

இதையடுத்து தொடர்ந்து 3வது முறையாக நாட்டின் பிரதமராக மோடி நாளை இரவு 7.15 மணிக்கு பதவி ஏற்க உள்ளார். அவருடன் தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் ஜனாதிபதி மாளிகையில் பிரமாண்டமாக செய்யப்பட்டு வருகின்றன. மோடி பதவி ஏற்பு விழாவில் இலங்கை, வங்கதேசம், மொரிஷியஸ், நேபாளம் உள்ளிட்ட உலக நாட்டு தலைவர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர். இதையடுத்து டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

* நான் எப்போதும் மோடியுடன் இருப்பேன் நிதிஷ் குமார் உறுதி
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பேசும்போது,’ நான் எப்போதும் பிரதமர் மோடியுடன் இருப்பேன். இன்று நாம் அனைவரும் ஒன்றாக இணைந்திருப்பது மிக நல்ல விஷயம். நாங்கள் எல்லோரும் உங்களுடன் சேர்ந்து பணியாற்றுவோம். ஞாயிற்றுக் கிழமை நீங்கள் பிரதமராக பதவியேற்க இருக்கிறீர்கள். நான் இன்றே நீங்கள் பதவியேற்றிருக்கலாம் என விரும்புகிறேன்.

நீங்கள் எப்போது உறுதிமொழி ஏற்றாலும் நாங்கள் உங்களுடன் இருப்போம். நாங்கள் உங்கள் தலைமையில் இணைந்து பணியாற்றுவோம். எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் இந்த தேசத்துக்கும் சரி எங்கள் மாநிலத்துக்கும் சரி எதுவும் செய்ததில்லை. இன்று அவர்கள் சில இடங்களில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் அடுத்த முறை நீங்கள் ஆட்சிக்கு வரும்போது அவர்கள் யாருமே, எங்குமே வென்றிருக்க மாட்டார்கள். மோடி இந்த தேசத்துக்காக சேவை செய்துள்ளார். அந்தச் சேவையில் ஏதேனும் மிச்சமிருந்திருந்தால் அவற்றை இந்த ஆட்சியில் அவர் பூர்த்தி செய்வார். இனி எப்போதும் நாங்கள் அவருடன் இருப்போம்’என்றார்.

* மாநிலங்களும் முக்கியம் தேசமும் முக்கியம் சந்திரபாபுநாயுடு
தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பேசுகையில், ‘தேர்தலில் பெரும்பான்மையாக வெற்றி பெற்றதற்கு அனைவரையும் வாழ்த்துகிறேன். தேர்தல் பிரசாரத்தின் போது 3 மாதங்களாக பிரதமர் மோடி ஓய்வே எடுக்கவில்லை. இரவு பகலாக பிரச்சாரம் செய்தார். எந்த உற்சாகத்துடன் பிரச்சாரத்தை தொடங்கினாரோ அதே உற்சாகத்துடன் பிரச்சாரத்தை முடித்தார். பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு முன்னெடுப்புகளை செய்தது.

மோடிக்கு தொலைநோக்கு பார்வை உள்ளது. மேலும் அவர் தனது கொள்கைகளை கச்சிதமாக நேர்மையாக செயல்படுத்துகிறார். மாநிலங்களின் ஆசைகள் மற்றும் தேசிய நலன்களை சமநிலைப்படுத்துவது, சமூகத்தின் அனைத்து அடுக்குகளுக்கும் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் இயங்க வேண்டும்.இன்று இந்தியாவுக்கு சரியான தலைவர் இருக்கிறார்.

அதுதான் மோடி. இந்தியாவுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. நான் எத்தனையோ தலைவர்களை பார்த்திருக்கிறேன். உலக அளவில் இந்தியாவை பெருமைப்படுத்தியதற்காக மோடிக்கு எல்லாப் புகழும் செல்ல வேண்டும். நாட்டுக்காக அவர் செய்த மிகப்பெரிய சாதனை இது. நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். மோடி தலைமையில், இந்தியர்கள் எதிர்காலத்தில் உலகத் தலைவர்களாக மாறப் போகிறார்கள்’ என்று பேசினார்.

* பவன் தென்றல் அல்ல பவன் ஒரு புயல்
நடிகர் பவன் கல்யாணை கூட்டத்தில் பிரதமர் மோடி வெகுவாக புகழ்ந்தார். அவரை சுட்டிக்காட்டிய மோடி, ‘நீங்கள் பார்ப்பது பவன், அவரின் பெயருக்கு ஏற்றாற்போல் அவர் தென்றல் அல்ல. அவர் ஒரு புயல்’ என்று பாராட்டினார். மேலும் சக்திவாய்ந்த தலைவர் சந்திரபாபு நாயுடு என்று மோடி தனது பேச்சில் புகழ்ந்து பேசினார்.

* அத்வானி, ஜோஷியிடம் வாழ்த்து பெற்ற மோடி
தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழுத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட மோடி, பாஜ மூத்த தலைவரான எல்கே அத்வானியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். இதனையடுத்து, பாஜவின் மற்றொரு மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷியை பிரதமர் மோடி அவரது இல்லத்தில் சந்தித்தார். பின்னர் டெல்லியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை பிரதமர் மோடி அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

* இன்னும் 10 ஆண்டு கழித்தாலும் காங்கிரஸ் 100ஐ தாண்டாது
மோடி ேபசுகையில்,’ வாக்குப்பதிவு எந்திரம் குறித்து எதிர்க்கட்சிகள் இனி சந்தேகம் கொள்ள மாட்டார்கள். நாட்டின் ஜனநாயக செயல்பாட்டில் அவநம்பிக்கை கொள்வதை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும். இதுவே இந்திய ஜனநாயகத்தின் பலம். இனியும் வாக்குப்பதிவு எந்திரம் குறித்து சந்தேகம் எழுப்பினால் நாடு அவர்களை மன்னிக்காது.

2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மிகப் பெரிய வெற்றி என்று உலகமே நம்புகிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகும் காங்கிரஸால் 100 இடங்களைக் கூட தொட முடியவில்லை. இந்தியா கூட்டணி மெதுவாக மூழ்கிக்கொண்டிருந்ததை தேர்தலின்போது நான் தெளிவாகக் கண்டேன். இனி அவர்கள் வேகமாக மூழ்குவார்கள்’ என்றார்.

* ஜேபி நட்டாவுக்கு அமைச்சர் பதவியா?
மோடி தலைமையில் நாளை பதவி ஏற்க உள்ள ஒன்றிய அமைச்சரவையில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. 19 ஒன்றிய அமைச்சர்கள் தோல்வி அடைந்து இருப்பதால் புதிய முகங்கள் இடம் பெறுவார்கள். மேலும் கூட்டணி கட்சிகளுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளிக்கப்படும். அதே போல் மூத்த அமைச்சர்கள் பலர் நீக்கப்படலாம் என்ற கருத்தும் எழுந்துள்ளது.

பா.ஜ தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் அவரது பதவிக்காலம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. நட்டா அமைச்சராகும்பட்சத்தில் பா.ஜ புதிய தலைவராக மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

* அமைச்சர் பதவி, இலாகாக்கள் பற்றிய வதந்தியை நம்ப வேண்டாம்
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் கட்சி கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘கடந்த இரண்டு நாட்களாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட அமைச்சர் பதவி குறித்த செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. இதுபோன்ற தகவல் எங்கிருந்து கிடைக்கிறது என்று கேட்க வேண்டும் என்று நான் சொன்னேன். கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு சந்தர்ப்பம் இருந்ததில்லை. எனவே இதுபோன்ற வதந்தியை நம்ப வேண்டாம்.

அமைச்சர்களின் பட்டியலுடன் எனது கையெழுத்துடன் கூட வெளியிடும் வகையில் தற்போது தொழில்நுட்பம் உள்ளது. ஆனால் மோடியை அறிந்த நீங்கள் இதுபோன்ற முயற்சிகள் பயனற்றவை என்பதை அறிந்து கொள்ளுங்கள். தொலைபேசி அழைப்பு வந்தால், அவை சம்பந்தப்பட்ட அதிகாரியா இல்லையா என்பதைச் உறுதிபார்க்க வேண்டும். வதந்திகளை நம்பாமல் விலகி இருக்க வேண்டும்’ என்றார்.

*100வது ஆண்டில் புதிய மைல்கல்
ஜனாதிபதியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைகோரிய பிறகு மோடி கூறியதாவது: என்னை பிரதமராக நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்து உள்ளார். பதவியேற்பு விழா குறித்து கேட்டார். வரும் 9ம் தேதி மாலையில் பதவியேற்பு விழா நடைபெறுவது எங்களுக்கு உகந்ததாக இருக்கும் என்று தெரிவித்துள்ளேன். இனி, மற்ற விஷயங்களை ஜனாதிபதி மாளிகை மேற்கொள்ளும்.

அதற்குள் நாங்கள் அமைச்சர்கள் பட்டியலை ஜனாதிபதியிடம் ஒப்படைப்போம். 18வது மக்களவை, ஒரு வகையில், புதிய ஆற்றலுடன், ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் உள்ளது. 2047ல் சுதந்திரத்தின் 100வது ஆண்டை நாடு கொண்டாட உள்ள நிலையில் இந்த 18வது மக்களவை, நாட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் ஒரு முக்கிய மைல் கல்லாக இருக்கும்’என்று மோடி தெரிவித்தார்.

* நடந்தது என்ன?

* நாடாளுமன்ற கூட்டத்துக்கு வந்ததுமே அரசியல் சாசன புத்தகத்தைத் தொட்டு நெற்றியில் வைத்து வணங்கிய பின்பே இருக்கையில் அமர்ந்தார் பிரதமர் மோடி.

* மோடியை பிரதமர் பதவிக்கு முதலாவதாக முன்மொழிந்தார் ராஜ்நாத் சிங்.

* கூட்டம் முழுவதுமே சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் இருவருடனும் சிரித்தவாறு பேசிக்கொண்டே இருந்தார்.

* லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான் பேசி முடித்ததும், அவரை கட்டியணைத்து முத்தமிட்டார் மோடி.

* நமது நாட்டில் இதுவரை 15 பேர் பிரதமர் பதவி வகித்துள்ளனர். அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து 9 பேர் பிரதமராக பதவி வகித்துள்ளனர்.

* நேரு, இந்திரா, ராஜிவ் ஆகிய 3 பேர் ஒரே குடும்பத்தில் இருந்து பதவி ஏற்றவர்கள்.

* முதல் பிரதமர் நேரு தொடர்ந்து 3 முறை பிரதமர் பதவி வகித்துள்ளார். அவர் 1947 முதல் 1964 வரை பிரதமர் பதவியில் இருந்தார்.

* நேருவுக்கு பிறகு தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பதவி வகிக்கும் பெருமையை மோடி பெற்றுள்ளார்.

The post தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக நாளை பதவி ஏற்கிறார் மோடி: உலக தலைவர்கள் வருகை appeared first on Dinakaran.

Tags : Modi ,New Delhi ,President ,Dinakaran ,
× RELATED இந்தோனேஷிய அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை