×

சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் ஊராட்சி மன்ற தலைவர் ஆய்வு செய்ய ஐகோர்ட் அனுமதி..!!

சென்னை: சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கோத்தகிரி ஊராட்சி தலைவர் ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில், அனுமதியின்றி கட்டடம் கட்டுப்பட்டுள்ளதால் அதற்கு வரி செலுத்த வேண்டும், விதிகளை மீறிய கட்டடத்தை இடிக்க வேண்டும் என கோடநாடு பஞ்சாயத்து தலைவர் பொன் தோஸ் கடந்த 2007ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இதனை எதிர்த்து கோடநாடு எஸ்டேட் மேலாளர் ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், கோடநாடு எஸ்டேட்டில் எந்த விதி மீறலும் இல்லை எனக்கூறி கோத்தகிரி பஞ்சாயத்து தலைவர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து கடந்த 2008ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து கோடநாடு பஞ்சாயத்து தலைவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு மனு நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வில் இன்று இறுதி விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கொடநாடு எஸ்டேட்டுக்குள் யாரும் உள்ளே நுழைய முடியாத நிலை இருப்பதாகவும், கூடுதல் கட்டுமானப் பணிகள் மேற்கொண்டிருந்தால் என்ன செய்வது? எனவும் ஆய்வு செய்தால் தானே அது தெரிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சசிகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், 2023 ஆம் ஆண்டு வரை சொத்து வரி செலுத்தப்பட்டுதாகக் கூறி, அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எஸ்டேட்டை ஆய்வு செய்யவும், சோதனை செய்யவும் அதிகாரிகளுக்கு முழு உரிமை உள்ளதாகக் கூறி, உரிய விதிமுறைகளை பின்பற்றி ஆய்வு செய்யலாம் என அனுமதியளித்து உத்தரவிட்ட நீதிபதிகள், ஆய்வின் போது நடுநிலையுடன் செயல்பட வேண்டும் எனவும், அங்கிருப்பவர்களை தொந்தரவு செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

 

The post சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் ஊராட்சி மன்ற தலைவர் ஆய்வு செய்ய ஐகோர்ட் அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : ICourt ,panchayat ,Kodanadu ,Sasikala ,CHENNAI ,High Court ,Kothagiri ,Koda Nadu ,Chief Minister ,Jayalalithaa ,
× RELATED தார் சாலை பணிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் கிளை உத்தரவு